பேரழகுச்சிலை ஒன்று
தொலைந்தது என்னைவிட்டு
மேகங்களை சேர்த்திழுக்கும்
பிறை நிலவு போல
புருவங்களை சேர்த்திழுக்கும்
நெற்றியில் சிறிதாய்ப் பொட்டிருக்கும்
மின்னும் விண்மீனை
மூக்கினில் அணிந்திருக்கும்,
அளவாய்த் திருநீர்
மருதாணி சிவந்த உள்ளங்கைகள்
மந்திரித்து கட்டிய சிகப்பு கயிறு
இறுக்கி முடிந்திருக்கும்
ஒற்றை ஜடை
சத்தமிடா நடை
மேனி தெரியா உடை
மையிடாக் கண்கள்
போதுமென்று நினைக்கிறேன் அடையாளங்கள்
மெச்சிடும் குறும்புடன்
பற்றிடும் சிரிப்புடன்
நித்தம் நீ வருகையில்
உனக்குத் தெரியாமல்
உன்னிடம் நிறைய பேசியிருக்கிறேன்
அனுமதியின்றி உனது கண்களை
அதிகம் பார்த்திருக்கிறேன்
அரிதான உன்
வறுமையின் சிரிப்புகளை
ஆங்காங்கே சேமித்து வைத்திருக்கிறேன்
அழகான உன்
வேடிக்கை அரட்டைகளை
தொலைவிலிருந்து ரசித்திருக்கிறேன்
உன்னுடன் இருந்த நிமிடங்கள்
சில துளிகளே
அவற்றில் சில நேரங்கள்
கூட்டம் நிறைந்த பேருந்துகளில்
சில பொழுதுகள்
வாசம் நிறைந்த கோவில்களில்
எப்போதாவது
துயரம் தேங்கிய உனது முகம்
கூட்டத்தையும் தாண்டி
அரிதாய்த் தெரியும்
நாத்தீகனாய் இருந்தும்
நீ வேண்டிடும் இறைவனிடம்
உனக்காக அதிகம் வேண்டி இருக்கிறேன்
வழிப்போக்கனாய் இருந்தும்
நீ சென்றிடும் இருள் நிறைந்த வீதிகளில்
உனக்காக அதிகம் அலைந்திருக்கிறேன்
உன் உள்ளத்தின் குழப்பங்களை
உன் இல்லத்தின் இழப்புகளை
தெளிவாய் அறிந்திருக்கிறேன்
உன் பிரிவின் தாக்கத்தை
எப்படிக் கடந்திடுவேன்
உன் விழியன் கண்ணீரை
எப்படித் துடைத்திடுவேன்
இறந்து போன காலங்கள் மீதும்
கடந்து போன நேரங்கள்களின் மீதும் தான் என் கோபங்கள்….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக