செவ்வாய், 18 செப்டம்பர், 2012

எந்தை












எந்தை நீ விந்தை
கந்தை அணிந்து
கடிகாரமாய் சுற்றி
பணம் சேர்த்திடுவாய்
உறவு பாராமல் செலவிட்டாய்
இரவு வாராமல் அலைந்திட்டாய்
கடிவாளம் இன்றி
யாவும் இழந்திட்டாய்.
வறுமை எங்கும் இருக்கும்
அது இங்கும் இருந்தது.
கை நீட்டி எது கேட்பினும்
கடன் பட்டாயினும் என்
கரம் சேர்த்திட்டாய்.
களைப்பாய் இருப்பினும்,
கவலைகள் கிடப்பினும்
என் மழலைக் குரல் கேட்க
அத்தனையும் மறந்திட்டாய்.
நான் பேசிடும் புரியா
வார்த்தைகளுக்கு அர்த்தம்
நீ தேடுகையில்
அப் … பா எனறு நான்
திக்கிச் சொன்னதை
ஊரெல்லாம் சொல்லி
பெருமைப்பட்டாய்.
நான் கண் விழிக்கும்
காலை நேரத்திற்க்காய்
தொட்டில் முன்
தவம் கிடந்தாய்.
என் மூத்திர தீர்த்ததில்
முப்பொழுதும் குளித்திடுவாய்.
தத்தி நான் நடக்கயில்
சுத்தி நீ அணைத்திடுவாய்.
கதை கேட்டு அடம் பிடித்தால்
சளைக்காமல் கதைத்திடுவாய்.
சுகமின்றி மடி சாய்ந்தால்
அசையாது அமர்ந்திடுவாய்.
உன் எச்சில் முத்தத்திற்கே
மதிப்பெண் முதலெடுப்பேன்.
உன் தோளில் கிடப்பதற்க்கே
பொய்யாய் உறங்கிடுவேன்.
நீ கேட்டிடும் பழைய பாடல்கள்
அன்றோ பிடிப்பதில்லை
இன்றோ பிரிவதில்லை
சீராட்டி குளிக்க வைத்து
ஆளாக்கி படிக்க வைத்து
எனை கரை சேர்த்திட
மெனக்கெட்டாய்
பசி போக்கிட
நலங்கெட்டாய்
அடி வயிற்று வலியில்
எத்தனை நாள்
துடித்தீரோ
மனமில்லாமல் தணல் சேர்ந்தாய்.
என்னால்
நீர் கண்ட வலிகள்
நான் காண
உன்னால்
நான் கண்ட சுகங்கள்
நீர் காண
காத்திருக்கிறேன்
உன் மறு பிறப்பிற்க்காய் …..

1 கருத்து: