வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

என்ன செய்ய காத்திருக்கிறோம்


பாரினிலே நல்ல நாடு,
நம் பாரத நாடு,
மதம் பிடித்ததினால்
வந்தது கேடு,
நிலை கெட்டதடா
அன்றோடு

பசிக்கு அன்னமிட்ட
பாரதப் பண்பாடு
கதி கலங்கி நிற்குது
பட்டினியின் நெஞ்சோடு
உயிர் போகாமல்
ஓடுது சுடுகாடு

என்ன செய்ய காத்திருக்கிறோம்
நம் நாடு நலம் பெற
நம் நாடு வளம் பெற

ஆள்பவன் சுத்தமில்லை – அவன்
ஆசையும் விட்டதில்லை
மக்களை மறந்தின்று
நாட்டையும் மறந்து விட்டான்
அரியணையில் ஏறியவன்
அதிகம் உறங்கி விட்டான்.

என்ன செய்ய காத்திருக்கிறோம்
நம் நாடு நலம் பெற
நம் நாடு வளம் பெற

உழைப்பாளி உசுர எல்லாம்
முதலாளி உறிஞ்சுடுறான்
அப்பாவி காச எல்லாம்
கடன்காரன் பறிச்சுடுறான்

தேச சண்டையில
உலகம் ஆடுதடா
ஆத்து சண்டையில
நாடே மாறுதடா
ஜாதி சண்டையில
வீதி நாறுதடா
வேலி சண்டையில
வீடே ஓடுதடா

பாதி முடியும் முன்னே,
மீதி போன தெங்கே
பாவம் தீரும் முன்னே,
கங்கையும் தீருமங்கே

எழுந்திடுவோம்
நம் வேகத்திலே
முடித்திடுவோம்
நம் காலத்திலே

என்ன செய்ய காத்திருக்கிறோம்
நம் நாடு நலம் பெற
நம் நாடு வளம் பெற

காதல் சோதனை


வீடே கதியென்று
நாளும் அடைந்திருந்தாள்
ஆடலும் ஓடலுமாய் முற்றத்தில்
அலைந்திருந்தாள்

மங்கை என்றானதும்
உலகம் இருண்டு
சற்றே சுருங்கியது
சேலை உடுத்தி
ஓரமாய் அமர்த்தப்பட்டாள்

காதலில் கலந்திட்ட
தோழியைக் கண்டு
தேடலில் மிதந்தாள்

பார்ப்பதும், முறைப்பதும்
சிரிப்பதும் ரசிப்பதுமாய்
யாவும் பழகி வந்தாள்

காதல் காவியங்கள்
தேடிப்படித்ததில் தலைவன்
ஒருவன் முடிவாய் அகப்பட்டான்

எண்ணங்கள் முழுவதும்
அவனையே நிறைத்தாள்

முந்திச் சென்று
மெதுவாய் நடந்தாள்

அரும்பாய் சிரித்து
அன்பினைக் கவர்ந்ததாள்

காந்த விழிகளால்
காவலில் வைத்தாள்

மறைந்து நின்று
கலவரம் செய்தாள்

கண்ணீர் விட்டு
கலங்கி நின்றாள் – ஆதரவானான்

கைகள் தொட்டு
காதலை சொன்னாள் – காவலனானான்

பரிசுகள் தந்தாள் – பைத்தியமானான்

அக்கறை கொண்டாள்
ஐக்கியமானான்

விடை யாரோ?


கனா கண்டேன்,
வினாத் தந்தாய்,

நிலா வந்தேன்,
உலாச் சென்றாய்,

கதை யாரோ,
விதை யாரோ,

வினாத் தந்த,
விடை நீயோ …..

அழகும் அமைதியும்

















கோவிலின் உள்ளே
நீ என்னைப் பார்க்காமல்
இருப்பதற்க்கே சற்று
ஒதுங்கி நின்றிருந்தேன்.

இப்போது
நீ என்னை கடந்து
போய்க் கொண்டிருக்கிறாய்.

உனது
ஒவ்வொரு அசைவுகளும்
மீட்டிடும் வீணையின்
அதிர்வுகளாக என் நெஞ்சில்
விழுகின்றன.

உன்னைப் பொருத்தவரை
நான் யாரோ தான்.

காரணமே இல்லாமலா
சிரிப்பதும் முறைப்பதுமாய்
இருந்திருப்பாய்.
காரணமே இல்லாமலா
பார்ப்பதும், அலைவதுமாய்
இருந்திருப்பேன்.

கைகளை குவித்து
கண்களை மூடி
யாருக்காக வெகு நேரம்
வேண்டிக் கொண்டிருக்கிறாய்
என்னைப் போல
உனக்காகவா?

கூட்டம் வருகிறது
விழி நீரை
துடைத்துக்கொள்
என் போல்.

பிரகாரத்தை சுற்றும் போது
முன்பெல்லாம் நாம்
பார்த்து ரசித்த நிலைக்கண்ணாடி
இன்று நீ பார்க்கவில்லை
நான் பார்த்தேன்.

தூண்களின் பின்புறம்
நானிருக்கிறேன் என்பதை
சுற்றிடும் கிளிகள்
விவரமாய் சொல்கிறது
கிளி பாசை
மறந்திருப்பாய் நீ…

இந்த ஊரும், இந்தக் கோவிலும்
இன்றும் அழகாகத்தான்
இருக்கிறது
உன்னைப் போல….

கோவிலை விட்டு
வெளியேறுகிறாய்.

உதிர்ந்த உனது
பூக்களைத் தவிர
என்னிடம் வேறேதுமில்லை

இந்த ஊரும், இந்தக் கோவிலும்
இன்றும் அமைதியாகத்தான்
இருக்கிறது
உன்னைப் போல…..

என்னவோ தெரியவில்லை


பயணத்திற்காக முன்கூட்டியே கிளம்பும் போதும்,
கனவுகளுக்காக அதிசயமாய் தூங்கும் போதும்,

காதலில் காத்திருக்கும் போதும்,
காய்ச்சலில் சாய்ந்திருக்கும் போதும்,

நண்பர்களின்றி ஊர் சுற்றும் போதும்,
திருவிழாவின்றி ஊர் வந்த போதும்,

காசில்லாமல் பசிக்கும் போதும்,
மின்விளக்கின்றி படிக்கும் போதும்,

திங்கள் ஆமையாய் போகும் போதும்,
வெள்ளி வெருதாய் போகும் போதும்,

மதிய வகுப்பில் மறைந்திருக்கும் போதும்,
செமஸ்டர் லீவில் அடைந்திருக்கும் போதும்,

ப்ராஜெக்ட் இல்லாமல் பென்ச்சில் இருக்கும் போதும்,
பேப்பர் போட்டு ப்ரொஜெக்டில் இருக்கும் போதும்,

என்னவோ தெரியவில்லை……..
நாளும் பொழுதும்,
நொடியும் முள்ளும்
வேகமாய் நகருவதில்லை …….

பட்டினத்து வாசிகள்


என்னதான் செய்கிறார்கள்
இந்த பட்டினத்து வாசிகள்
அதிகாலை எழுவதுண்டா?
குளிர் நீரில் குளிப்பதுண்டா?
கூந்தல் முடிவதுண்டா? அங்கே
பூக்கள் சூடுவதுண்டா?
வாசல் தெளிப்பதுண்டா? அரிசிக்
கோலம் இடுவதுண்டா?
தரையில் அமர்வதுண்டா?
மழையில் நனைவதுண்டா?
கதவைத் திறப்பதுண்டா?
சுற்றம் மதிப்பதுண்டா?
மொட்டை மாடி தூக்கம் உண்டா?
விண்மீன் கூட்டம் ரசித்ததுண்டா?
அம்மிக்கல்லில் அரைத்ததுண்டா?
கும்மித்துணியை துவைத்ததுண்டா?
கையில் சோறு உண்பதுண்டா?
கஞ்சி கரைத்து குடித்ததுண்டா?
பிச்சை கொடுப்பதுண்டா?
பிள்ளை வளர்ப்பதுண்டா?
உழைத்து உயர்ந்ததுண்டா?
பகிர்ந்து பிழைத்ததுண்டா?
கடைக்கு நடப்பதுண்டா?
மிதிவண்டி பயணம் உண்டா?

பண்டிகைக்கு மட்டுமே
வேட்டியும் சேலையும்

பார்வைக்கு மட்டுமே
அன்பும் பாசமும்

வசதிக்கு மட்டுமே
பண்பும் பழக்கமும்


கணினியும், தொலைக்காட்சியும்
அலைபேசியும், வலைத்தளங்களுமே
இவர்களின் பிரியா நண்பர்கள்

வேறேது வேண்டும்

சற்றும் நிமிர்ந்திடாத முன்தலை
சுற்றும் அலைந்திடாத கண்கள்
முற்றும் மலர்ந்திடாத புன்னகை
கற்றும் பகிர்ந்திடா செந்தமிழ்
நிமிர்ந்து,
நோக்கி,
சிரித்து,
பேசி,
என்னுடன்
நடந்ததை
எப்படி மறப்பேன்

விண்ணில் மிதந்த
விண்மீன்கள்
மண்ணில் கண்டேனன்று

இதற்க்கு முன் என் கண்களுக்கு
இப்படி ஓர் குளிர்ச்சி இல்லை
இதற்க்கு முன் என் கண்களுக்கு
இப்படி ஓர் எழுச்சி இல்லை

பல கோடி பிரச்சனைகளை
சாகடித்த சில நொடி நேரமது

துணையின்றி தான் வந்தேன்
அந்தச் சாலையில்

குடையின்றி தான் வந்தேன்
அந்தச் சாரலில்

உறவின்றிப் போனாலும்
சுகமின்றிப் போனாலும்
அன்பு துணை ஒன்று
நீ இருக்க
வேறேது வேண்டும் சகி

சனி, 11 ஆகஸ்ட், 2012

எதுவும் அதுவாக இல்லை



தெரிந்தும் படவில்லை கண்ணில்-பின்
தொடர்ந்தும் தடமில்லை மண்ணில்
மறந்தும் அழவில்லை
முறிந்தும் விழவில்லை
எரிந்தும் சுடவில்லை
அணைந்தும் விடவில்லை
எதுவும் எனக்கில்லை என்று
புரிந்தும் மனமில்லை இன்று
எதுவும் அதுவாக இல்லை
அதுவும் முடிவாக இல்லை

சேர்ந்து கொண்டே இருக்கும் ஆசைகள்



என்றழியுமோ இந்த யுகம்
என்றடங்குமோ இந்த உடல்
நிச்சியமில்லாத இந்த வாழ்க்கையில்
சேர்ந்து கொண்டே போகிறது ஆசைகள்

மாறிக்கொண்டே இருக்கும் காலத்தைப் போல
ஊறிக்கொண்டே இருக்கும் ஊற்றைப் போல
வீசிக்கொண்டே இருக்கும் காற்றைப் போல
ஓடிக்கொண்டே இருக்கும் மேகத்தைப் போல
கூடிக்கொண்டே இருக்கிறது ஆசைகள்

இதயம் என்னும் அணையில்
அவைகள் என்றும் வற்றிப் போவதில்லை

அவைகளை அவைகளே கொல்லும்
அவைகளை அவைகளே வெல்லும்
அவைகளை அவைகளே கிள்ளும்
அவைகளை அவைகளே தின்னும்

இன்னும்
சேர்ந்து கொண்டே இருக்கும்
இந்த ஆசைகள்
எங்கு முடிந்திடுமோ?
எப்போது முடிந்திடுமோ?
எப்படி முடிந்திடுமோ?

முற்றுப் புள்ளிகள் இன்றி இன்னும்
முட்டிக்கொண்டே இருக்கிறது
ஆசைகள் ஆழமானதாக இருந்தால்
அதனை அடைவதற்கான வழிகள்
தாமாகவே புலப்படும்.

எதை இழந்திருப்பேன்
















எதை இழந்திருப்பேன்
இமைக்குள் ஈரம் கசிந்திருக்க,
ஏதோ இழக்கப்பட்டிருக்கிறது.
ஏதும் இழக்கவில்லை என்று
உறுதியாய் சொல்லி விட முடியாது.
இழப்பதற்கு ஏதும் இல்லாத போது
எதை இழந்திருப்பேன்.
இருண்டு கிடக்கும் தூக்கத்தையா?
வறண்டு கிடக்கும் இன்பதையா?
இறந்து போன நினைவுகளையா?
மறந்து போன கனவுகளையா?
எதை இழந்திருப்பேன்
இழப்பதற்கு ஏதும் இல்லாத போது!
வெகு நாட்கள் கழித்து
தெளிவான சிந்தையுடன்
தெளிவான பாதையில்
பயணப்படும் தருணம்
புரிந்தது.
காலம்
காலத்தின்
காதல்
காதலின்
நீட்சி
இழக்கப்பட்டிருக்கிறது.

முயற்சிக்க விரும்பிய கனவுகள்



முளைத்து எழுந்த நாள் முதலாய்,
சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன்.

தினமும்
உண்ண மறப்பதில்லை,
இரவில் விழித்து பழக்கமில்லை,

உயிர்த்தெழுந்த நாள் முதலாய்
நான் … நான் தான்
எதற்க்காக விதைக்கப் பட்டேன்.
கனவுகள் எதற்கு,
உறவுகள் எதற்கு,

ஞாலமே நோக்கும்
விண் நிலவு போல,
என்னையும் நோக்கும்
காலத்திற்க்காகத் தான்
காத்திருக்கிறேன்.

முயற்சிக்க விரும்பிய
என் கனவுகள்,

முயன்றும் – அவை
முடியாது போகும் போதும்,

புரிந்தும் – அவை
புரியாது போகும் போதும்,

கலங்கிடுவேனோ – மனம்
தளர்ந்திடுவேனோ.

ஞாலமே நோக்கும்
விண் நிலவு போல,
என்னையும் நோக்கும்
காலத்திற்க்காகத் தான்
இந்த உயிர்.

குப்பையில் தெய்வம்



கருவிலேயே கலைந்திருக்கலாம் – அல்லது

பிறந்ததும் இறந்திருக்கலாம்.

வாழ்வதற்க்கு உண்டான அத்தனை

சாத்தியக்கூறுகளும்

என்னுள் இருந்ததென்னவோ!

பிரியும் முன்

சிறிதாய் உயிரிட்டுப் போயிருந்தாள்.

உயிரிட்டுப் போனவள்;

ஒருவாய் நீரிட்டுப் போயிருக்கலாம்.

திரையிட்டு போனவள்;

அழகாய் பெயரிட்டுப் போயிருக்கலாம்.

நிலவும் இல்லாத

இந்தப் பின்இரவில்

என்ன செய்ய முடியும் என்னால்

அழத்தான் தெரியும்

வயிற்றை நிரப்பும் வரை.

யார் வந்து எடுப்பாரோ?

யார் வந்து கொடுப்பாரோ?

தெரு நாய்கள் கூட குட்டிகளுடன்

அமைதியாய் உறங்குகிறது.

கடித்திடும் எறும்புகளை

தடுத்திடவா முடியும்.

ஆற்றில் வீசியிருந்தால்

நொடியில் இறந்திருப்பேனே – இப்படி

சேற்றில் வீசினாயே!

என்னால்

அழத்தான் முடியும்

வயிற்றை நிரப்பும் வரை – அல்லது

என் மூச்சை நிறுத்தும் வரை……



ரத்தம் கொதிக்கிறது



ரத்தம் கொதிக்கிறது உச்சம்
யுத்தம் நடக்கிறது நித்தம்
அச்சம் அச்சம் என செத்து வீழவா வந்தோம்.
சத்தம் சத்தம் என பொத்தி வாழவா வந்தோம்.
வாழ்ந்த வீடு போகட்டும்;
அலைந்த வீதி போகட்டும்;
வளர்த்த ஆடு போகட்டும்;
விளைந்த காடு போகட்டும்;
சேர்த்த காசு போகட்டும்;
ஏன்…
உசுரே போகட்டுமே;
அச்சம் எதற்கு;
இனி
மருந்து கிடைக்காது
நம் காயத்துக்கு;
தூக்கம் கிடைக்காது
நம் கண்களுக்கு;
உதவி கிடைக்காது
உணவும் கிடைக்காது
அச்சம் அச்சம் என செத்து வீழவா வந்தோம்.
சத்தம் சத்தம் என பொத்தி வாழவா வந்தோம்.
கண்ணீர் போதும்
கவலை போதும்
காதல் போதும்
மரணமே குறுக்கிட்டாலும்
அடிமை இல்லை என்று
உரக்க காத்திடுவோம்
நெற்கதிரானது போதும்
இனி
முட்செடி ஆகிடுவோம்
முட்செடி ஆகிடுவோம் ….

எப்போதும் கிடைத்திடுமோ சோறு




சொல்லாமல் விடிந்திடும் இரவு

சொல்லாமல் பெய்திடும் மழை

சொல்லாமல் புரிந்திடுமோ வாழ்க்கை ?



நில்லாமல் கலைந்திடும் முகில்

நில்லாமல் அலைந்திடும் அலை

நில்லாமல் துடித்திடுமோ இதயம் ?



இல்லாமல் இழுத்திடும் காற்று

இல்லாமல் அணைத்திடும் குளிர்

இல்லாமல் கடந்திடுமோ துயர் ?



பிரியாமல் தொடர்ந்திடும் நிழல்

பிரியாமல் தெரிந்திடும் நிலா

பிரியாமல் அடங்கிடுமோ உயிர் ?



எப்போதும் எரித்திடும் வெயில்

எப்போதும் சிரித்திடுமோ வயல்!!!!

எப்போதும் பசித்திடும் வயிறு

எப்போதும் கிடைத்திடுமோ சோறு!!!!

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

முடியுமென நம்பு


முடியுமென நம்பு
விடியுமென நம்பு
உறுதியென நின்றால்
இறுதியிலே வெல்வாய்

விடியும் வரை
சிந்திடும் வேர்வையில்
சுத்தம் இல்லை என்றாலும்
மடியும் வரை
வாழ்ந்திடும் வாழ்க்கையில்
சுகங்களில்லை என்றாலும்
விடியுமென நம்பு

வான் மழை உன்னை சுத்தமாக்கும்
வான் புகழ் உன்னை சொந்தமாக்கும்

தேடிக் கிடைக்காத அன்பில்
ஈரமில்லை என்றாலும்
ஓடிச் சலிக்காத நாளில்
வேகமில்லை என்றாலும்
முடியுமென நம்பு
பேரன்பு உம்மை வந்து நிற்கும்
பேரலை உம்மைச் சங்கமிக்கும்

உன்னாலே உன்னாலே


சதி செய்வது யாரோ?
விழி கொண்டு
விதி செய்வதும்
மதி கொண்டு
மனம் கொய்வதும்,
யாரோ?
 
உன்னாலே தினம் ஏற்றங்கள்
கண்ணாலே தினம் தேற்றங்கள்
 
உன்னாலே தினம் ஏக்கங்கள்
தன்னாலே தினம் தேக்கங்கள்
 
சதி செய்வது நீயோ ரதியே!
விழி கொண்டு
விதி செய்வதும்
மதி கொண்டு
மனம் கொய்வதும்,
நீயோ ரதியே!
 
 
உன்னாலே இந்த மாற்றங்கள்
உன்னாலே இந்த மோட்சங்கள்
 
உன்னாலே இந்த நிறுத்தங்கள்
உன்னாலே இந்த விருத்தங்கள்
 
 
சதி செய்வது நீயே ரதியே!
விழி கொண்டு
விதி செய்ததும்
மதி கொண்டு
மனம் கொய்ததும்,
நீயே ரதியே!
 
உன்னாலே என் இறந்த காலமும்
வாழ்ந்து கொண்டிருக்கின்றது
உன்னாலே என் நிகழ் காலமும்
அழகாய் மாறிக்கொண்டு இருக்கிறது,
உன்னாலே என் எதிர் காலமும்
நிச்சயிக்கப் பட்டு விட்டது.

நானும் நிலவும்


விடியாத அதிகாலை
அடர்ந்த பனியின் சாரத்தை
முட்டிக் கிழித்து முன்னே
சென்று கொண்டிருக்கிறது
பொதிகை புகை வண்டி
முன்பதிவில்லாத
இருக்கையின் ஓரம் அது.
உறக்கம் கண்களில் இல்லை
ஜன்னல் கதவினை
மெல்லத் திறக்கிறேன்.
வெள்ளைப் பனி என்னை
அள்ளிக் கொண்டது
ஆங்கங்கே விளக்குகள்
விழித்திருந்தாலும் அதன்
பார்வை என்னவோ
மங்கலாகத் தான் இருக்கின்றது.
இப்போது
ஒரு நதியின் மேம்பாலத்தைக்
கடக்கிறது பொதிகை.
ஈரக்காற்றில் என் இறந்த
காலங்கள் மிதக்கத் தொடங்கின.
பௌர்ணமிக்கு முந்தய நிலவு
இன்னும் பறிக்காமல்
விண்ணில் இருக்கின்றது
கண்களை விட்டு சிறிதும் விலகாமல்
நண்பனாய்  கூடவே
பயணப்படும் அதன்
பிரியத்தை என்னவென்று சொல்வது
உலகை வெறுக்கின்ற
ஒவ்வொரு நொடியும்
எனக்கென்று நீ இருக்கையில்
நானும் இருப்பேன்
உனக்காக …..

சனி, 4 ஆகஸ்ட், 2012

பிரார்த்தனை செய்வோம்


நெல்லெல்லாம் சருகான
திசையெல்லாம் அனல் காற்று;
ஊற்றெல்லாம் புதரான
வழியெல்லாம் சுடும் காடு;
வற்றிப்போன கரையெல்லாம்
வெயில் வதக்கிய மீன் குஞ்சுகள்;
கண்ணுக்கெட்டிய தொலைவு வரை
கருப்பு வெள்ளையாய் எங்கும்
கூனி கிடக்கிறது பச்சை வயல்கள்;
பூத்துக்குலுங்கிய மரக்கிளைகள்
எலும்புக்கூடாய் நிற்க்கிறது;
நிழல்கள் இல்லாத பாதையில்
கருகிக் கிடக்கிறது இலைகள்;
ஊரின்றி அமையாது உலகு
நீரின்றி அடங்காது உசுரு
நிலமெல்லாம் நீ வேண்டும்!!!
வற்றாத ஊற்றாக
கிணறெல்லாம் நீ வேண்டும்.
எட்டாத கனியாக;
சொட்டாத தேனாக;
விண்ணோடு நிலைக்காமல்,
மண்ணோடு மழையாக நீ வேண்டும்.
வெயில் பொசுக்கிடும்
உழவனின் உடலின்
வேர்வையில் கலந்து
ஓவியம் தீட்டிட வேண்டும் நீ….
சிட்டுக் குருவிக்கும், சுட்டி அணிலுக்கும்,
தொட்டி மீனுக்கும், பட்டி ஆட்டுக்கும்
வற்றாத தேனாக வேண்டும் நீ….
மழையே மண்ணெல்லாம்
நீ வேண்டும்.