செவ்வாய், 18 செப்டம்பர், 2012

நாட்குறிப்பு

உன்
வருகை,
சிரிப்பு,
தும்மல்,
கோபம்,
வெட்கம்,
குறும்பு,
அச்சம்,
அன்பு,
மௌனம்
இவைகள் யாவும் இங்கே
அழகாய் பதிக்கபட்டிருக்கும்
யாருக்கும் தெரியாத மொழிகளில்……

எந்தை












எந்தை நீ விந்தை
கந்தை அணிந்து
கடிகாரமாய் சுற்றி
பணம் சேர்த்திடுவாய்
உறவு பாராமல் செலவிட்டாய்
இரவு வாராமல் அலைந்திட்டாய்
கடிவாளம் இன்றி
யாவும் இழந்திட்டாய்.
வறுமை எங்கும் இருக்கும்
அது இங்கும் இருந்தது.
கை நீட்டி எது கேட்பினும்
கடன் பட்டாயினும் என்
கரம் சேர்த்திட்டாய்.
களைப்பாய் இருப்பினும்,
கவலைகள் கிடப்பினும்
என் மழலைக் குரல் கேட்க
அத்தனையும் மறந்திட்டாய்.
நான் பேசிடும் புரியா
வார்த்தைகளுக்கு அர்த்தம்
நீ தேடுகையில்
அப் … பா எனறு நான்
திக்கிச் சொன்னதை
ஊரெல்லாம் சொல்லி
பெருமைப்பட்டாய்.
நான் கண் விழிக்கும்
காலை நேரத்திற்க்காய்
தொட்டில் முன்
தவம் கிடந்தாய்.
என் மூத்திர தீர்த்ததில்
முப்பொழுதும் குளித்திடுவாய்.
தத்தி நான் நடக்கயில்
சுத்தி நீ அணைத்திடுவாய்.
கதை கேட்டு அடம் பிடித்தால்
சளைக்காமல் கதைத்திடுவாய்.
சுகமின்றி மடி சாய்ந்தால்
அசையாது அமர்ந்திடுவாய்.
உன் எச்சில் முத்தத்திற்கே
மதிப்பெண் முதலெடுப்பேன்.
உன் தோளில் கிடப்பதற்க்கே
பொய்யாய் உறங்கிடுவேன்.
நீ கேட்டிடும் பழைய பாடல்கள்
அன்றோ பிடிப்பதில்லை
இன்றோ பிரிவதில்லை
சீராட்டி குளிக்க வைத்து
ஆளாக்கி படிக்க வைத்து
எனை கரை சேர்த்திட
மெனக்கெட்டாய்
பசி போக்கிட
நலங்கெட்டாய்
அடி வயிற்று வலியில்
எத்தனை நாள்
துடித்தீரோ
மனமில்லாமல் தணல் சேர்ந்தாய்.
என்னால்
நீர் கண்ட வலிகள்
நான் காண
உன்னால்
நான் கண்ட சுகங்கள்
நீர் காண
காத்திருக்கிறேன்
உன் மறு பிறப்பிற்க்காய் …..

பூவினில் பிறந்தாய்










பூவினில் பிறந்தாய்
ஆழ்கடல் கடைந்தாய்
காற்றென நுழைந்தாய்
ஆற்றேன நிறைந்தாய்
வேல்விழி அம்பினால்
வேங்கையை வென்றாய்
பூவிதழ் சிரிப்பினால்
புது ரெத்தம் தந்தாய்

பாராது ஒதுங்கிய
சிலமுறை சந்திப்புகளில்
பார்த்துப் பதுங்கிய
உன் முத்து விழிகளின்
பலநாள் ஆசையை
மூடி மறைத்து
என்ன சுகம் கண்டாயோ!

பிறை நிலவு போல
தூக்கமிழந்து
பசும் புல்லைப் போல
பனியிலுரைந்து

சந்திக்க யோகமின்றி – உனை
சிந்திக்கும் நேரமெல்லாம்
சந்தோசம் சர்க்கரையாய் சங்கீதம் சங்கமிக்கும்

பேசாது ஒதுங்கிய
நம் கடைசி சந்திப்பில்
பேசிடத் துடித்திட்ட – உன்
சில நொடி சிந்திப்பை
நானின்றி யாரறிவாரோ!

பித்தனைப் போல
புத்தியிழந்து
புத்தனைப் போல
புகழையிழந்து

சிந்திக்க நேரமின்றி – உனை
சந்திக்கும் யோகமெல்லாம்
குறுநகை சிந்திடவே சித்தம் தன் பிணி அகலும்

நீ பூவினில் பிறந்தாய்………..

ஏனோ எனக்குள் தானடா

ஏனோ எனக்குள் தானடா – புது
வேகம் பிறந்தது ஏனடா
கோபம் உனக்குள் ஏனடா – அதை
கூண்டில் அடைப்பவள் நானடா
மனதினில் சிறு…சிறு…சிறு
இடம் கொடு மலர் மலர்ந்திட
கனவினில் தினம்…தினம்…தினம்
பழகிடு உயிர் கலந்திட
கத்தி இன்றி ரத்தமின்றி என்னுள்ளே
யுத்தமொன்றில் சுற்றுகின்ற போர் வீரா
                                                – ஏனோ எனக்குள்
தேடல் உனக்குள் தானடா – அதைப்
பூவிடம் மறைப்பது வீணடா
சோகம் உனக்குள் ஏனடா – அதைப்
பகிர்ந்திட வருகிறேன் நானடா
வானத்தில் மேகங்கள் கூடிடக் கண்டேன்
வாசலில் கோலங்கள் நனைந்திட நின்றேன்

உனைத் தேடியே வந்தேன் – உன்
சிநேகிதி அன்பினைப் புரிவாயோ
உயிர் வழங்கு – உத்தரவே
உடன் வருவேன் – இக்கணமே
மஞ்சள் தாலி – ஒன்று எந்தன்
நெஞ்சில் குத்தும் வலியை
நித்தம் சுமந்து
உன் சகியை செத்துவிட
யோகம் எனக்குள் தானடா
அதை நீதான் தருவாய் மானுடா
பேதம் நமக்குள் ஏனடா
இந்த வேதம் சொல்வது மெய்யடா
          
                                    – ஏனோ எனக்குள்

வயக்காட்டு கீதம்

தை மாசம் பொறக்கணுமே
கவலை யெல்லாம் பறக்கணுமே
பொற்க் காலம் பூக்கணுமே
புது வெளிச்சம் தெரியணுமே

நெத்தியில சுட்ட வேர்வ
பச்ச நெலம் சேரணுமே
பாடு பட்டு வெதச்சதெல்லாம்
மணி மணியா வெளயணுமே

அந்தியில பெஞ்ச மழை
நஞ்சை யெல்லாம் மிஞ்சணுமே,
ஓடக்காடு பள்ள மெல்லாம்
பச்சத் தண்ணி நெறயணுமே

ஆத்தில மெல்ல தாமரப்பூ
எட்டி எட்டிப் பார்க்கணுமே
காத்தில தென்ன இல
கொஞ்சி கொஞ்சி பேசணுமே

நெத்திச்சூடி















மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு
புல்லு மட்ட ஏத்திக்கிட்டு,
காட்டு வழி போகயில – அடி
அத்த புள்ள ஓன் நெனப்ப
பத்திரமா வச்சிருக்கேன்.
காத்து மெல்ல வீசிடுச்சி
காதில் எதோ பேசிடுச்சி
ஆத்து வெள்ளம் போல என்,
ஆசையெல்லாம் ஓடுதடி.
அந்தியில முத்து மொகம்
வானத்தில வந்துடுச்சி
முல்லப்பூவு வாசத்துல
என் மனசும் கலந்துடுச்சி
காள மணி சத்தத்தோட
உன் கொலுசும் பேசிடுச்சி
சந்தையில நெத்திச்சூடி
அழகழகா மின்னுதடி
காசு பணம் போதலயே
நெத்திச்சூடி வாங்கலயே
மனசெல்லாம் நெத்திச்சூடி
உன் நெத்தியிலே மின்னுதடி
வானமிப்போ இருட்டிடுச்சி
நட்ச்சத்திரம் தெரிஞ்சிடுச்சி
வந்த பாத மறந்திடுச்சி
வாடக் காத்தும் அடிச்சிடுச்சி
ஒத்தையில ஓன் நெனப்பு
வழியெல்லாம் பூத்திடுச்சி
நெத்திச்சூடி வாங்கலையே
மனசெல்லாம் வாடிடுச்சி
ஊரு எல்லை வந்திடுச்சி
கொண்டச் சேவ கூவிடுச்சி
ஆத்தில தண்ணிஎடுக்க
நீ வரும் நேரமாச்சே
மாட்டு வால தட்டிவிட்டு
சீக்கிரமா ஓடச் சொன்னேன்
ஆயிரங்கால் வைக்கயிலே
ஆத்தங்கர வந்திடுச்சி
மாடு ரெண்டும் மேயவிட்டு
ஆசையோட ஓடிவந்தேன்
கண்ணு ரெண்டும் ஏவிவிட்டு
கால் வலிக்க காத்திருந்தேன்
நேரம் எங்கோ போயிடுச்சி
பொழுதும் இப்போ விடிஞ்சிடுச்சி
அத்தபுள்ள காணலேன்னு
கண்ணு ரெண்டும் கலங்கிடுச்சி
நெத்திச்சூடி வாங்கலேன்னு
முத்து நிலா மூழ்கிடுச்சு…

மண ஓலை

நானிலம் எல்லாம் நன்னாள் இந்நாள்
காரிருள் கலைந்து பனிக்கதிர் சிதறிட
நாற்பயன் பேருடன் சாதிரை கூடிட
மூவுலகெல்லாம் முரசொலி முழங்கிட
பூப்பந்தல்; திருக்கோலம்
மேகலைச் சுடர் மீலனம்
யாவும் புதிதிங்கு
வைகரை; விடிவெள்ளி
அட்சதை; அருந்ததி
யாவும் புதிதிங்கு
சிறுநகை; சந்தோசம்
சமிக்கை; சதிர் நாணம்
யாவும் புதிதிங்கு
நலங்கு; பரிகாசம்
நளினம்; மதிமூர்ச்சை
யாவும் புதிதிங்கு
சனனம்; சிநேகிதம்
வாசிகை; சுகந்தம்
யாவும் புதிதிங்கு
வர்ணம் தூறிட்ட
தோரண வாயில் அங்கே,
வஞ்சியர்கள் சூழ
ஆரத்தி என
யாவும் புதிதிங்கு
உற்றார் உறவினரே – எம்
தோழர் தோழியரே – உம்
சுற்றம் புடை சூழ
நாளோளைத் தியதியன்று
நாளந்தி சிறுநனி
மீரம் பொங்கிடும்
விம்மிதம் கண்டு,
சங்கமிக்கும் எங்களை
வாழ்த்திட உகமகிழ
விளிக்கின்றேன்.
—————
நானிலம் – பூமி
காரிருள் – இரவு
பனிக்கதிர் – சூரியன்
நாற்பயன் – நான்கு வகை பயன்கள்
சாதிரை – ஊர்வலம்
மேகலை சுடர் மீலனம் – மணமேடையில் கோலங்களுக்கு இடையே சிரிக்கும் தீபம்
வைகரை – அதிகாலை
வாசிகை – பூமாலை
தியதி – தேதி
மீரம் – கடல்
நாளந்தி – நுண் காலை
சிறு நனி – நேரம்
விம்மிதம் – அதிசயம்
விளிக்கின்றேன் – அழைக்கின்றேன்

பேரழகுச்சிலை

பேரழகுச்சிலை ஒன்று
தொலைந்தது என்னைவிட்டு
 
மேகங்களை சேர்த்திழுக்கும்
பிறை நிலவு போல
 புருவங்களை சேர்த்திழுக்கும்
நெற்றியில் சிறிதாய்ப் பொட்டிருக்கும் 
மின்னும் விண்மீனை
மூக்கினில் அணிந்திருக்கும்,
 
அளவாய்த் திருநீர்
மருதாணி சிவந்த உள்ளங்கைகள்
மந்திரித்து கட்டிய சிகப்பு கயிறு
இறுக்கி முடிந்திருக்கும்
ஒற்றை ஜடை
சத்தமிடா நடை
மேனி தெரியா உடை
மையிடாக் கண்கள்
 
போதுமென்று நினைக்கிறேன் அடையாளங்கள்
 
மெச்சிடும் குறும்புடன்
பற்றிடும் சிரிப்புடன்
நித்தம் நீ வருகையில்
 
உனக்குத் தெரியாமல்
உன்னிடம் நிறைய பேசியிருக்கிறேன்
அனுமதியின்றி உனது கண்களை
அதிகம் பார்த்திருக்கிறேன்
 
அரிதான உன்
வறுமையின் சிரிப்புகளை
ஆங்காங்கே சேமித்து வைத்திருக்கிறேன்
அழகான உன்
வேடிக்கை அரட்டைகளை
தொலைவிலிருந்து ரசித்திருக்கிறேன்
 
உன்னுடன் இருந்த நிமிடங்கள்
சில துளிகளே
 
அவற்றில் சில நேரங்கள்
கூட்டம் நிறைந்த பேருந்துகளில்
சில பொழுதுகள்
வாசம் நிறைந்த கோவில்களில்
 
எப்போதாவது
துயரம் தேங்கிய உனது முகம்
கூட்டத்தையும் தாண்டி
அரிதாய்த் தெரியும்
 
நாத்தீகனாய் இருந்தும்
நீ வேண்டிடும் இறைவனிடம்
உனக்காக அதிகம் வேண்டி இருக்கிறேன்
 
வழிப்போக்கனாய் இருந்தும்
நீ சென்றிடும் இருள் நிறைந்த வீதிகளில்
உனக்காக அதிகம் அலைந்திருக்கிறேன்
 
உன் உள்ளத்தின் குழப்பங்களை
உன் இல்லத்தின் இழப்புகளை
தெளிவாய் அறிந்திருக்கிறேன்
 
உன் பிரிவின் தாக்கத்தை
எப்படிக் கடந்திடுவேன்
உன் விழியன் கண்ணீரை
எப்படித் துடைத்திடுவேன்
 
இறந்து போன காலங்கள் மீதும்
கடந்து போன நேரங்கள்களின் மீதும் தான் என் கோபங்கள்….

பார்த்தாலே பைத்தியம் பிடிக்கும்

பார்த்தாலே பைத்தியம் பிடிக்கும்
வைத்தியத்த சொல்லு,
சிரிச்சாலே சிந்தன செதறும்
ரகசியத்த சொல்லு,
சிரிச்சாலே .. ஹோ ஹோ …….
பார்த்தாலே பைத்தியம் பிடிக்கும்
வைத்தியத்த சொல்லு,
சிரிச்சாலே சிந்தன செதறும்
ரகசியத்த சொல்லு,
கொஞ்சம் பார்த்து சிரிச்சி போயேன்,
நெஞ்சக் கீறி நெறஞ்சி போயேன்
கொஞ்சம் பேசிப் பழகிப் போயேன்
அன்பைத் தூவி வெதச்சு போயேன்.
கொஞ்சம் பார்த்து சிரிச்சி போயேன்,
நெஞ்சக் கீறி நெறஞ்சி போயேன்
கொஞ்சம் பேசிப் பழகிப் போயேன்
அன்பைத் தூவி வெதச்சு போயேன்.
பூச்சூடி வீதியில
தேர்போல வருகிறாய்
வரவா துணையாய் வரவா
வரவா நானும்
தனியா நான் போகயில
நெழல் போல தொடர்கிறாய்
தரவா காதல் தரவா
தரவா காதல்
தெரியாமல் எதிரே வந்தாய்
புரியாமல் நின்றாய்
பதிலேதும் அறவே இல்லை
சிரிப்பாலே கொன்றாய்
புது நாத்து சேலைகட்டி
சிலைபோல வருகிறேன்
வரலாம் துணையாய் வரலாம்
துணை நீ தானே,
வழியெல்லாம் சோலையில
பூப்போல சிரிக்கிறேன்,
தரலாம் காதல் தலைவா
தலைவி நானே.
தெரிந்தேதான் எதிரே வந்தேன்
புரிந்தேதான் நின்றேன்
விழியாலே நலமா என்றேன்
விடையின்றி சென்றேன்
விழியாலே நலமா என்றேன்
விடையின்றி சென்றேன்
கொஞ்சம் பார்த்து சிரிச்சி போயேன்,
நெஞ்சக் கீறி நெறஞ்சி போயேன்
கொஞ்சம் பேசிப் பழகிப் போயேன்
அன்பைத் தூவி வெதச்சு போயேன்.

மெத்தப் படித்த மேதாவிங்க

                        
                             அந்தத் தெரு கோடம்பாக்கத்தில் உள்ள முக்கியமான வசிப்பிடம். எப்பொழுதும் அவன் அந்த தெரு வழியாகத்தான் வீட்டிற்க்கு செல்வது வழக்கம். காரணம் அந்தத் தெருவின் உள்ளே நுழையும் போதே ஏகப்பட்ட பறவைகளின் சப்தமும், வேப்பம் பூக்களின் வாசமும் அவன் மனதை யாருமற்ற காட்டின் வழியே கொண்டுசெல்லும் ஒரு அற்புத உணர்வினைக் கொடுக்கும். தெருவின் இரு புறமும் அடர்ந்து ஓங்கிய மரங்கள் வெய்யிலின் கதிர்களை விரட்டி அடித்து எங்கும் நிழல்களைப் பரப்பிக் கொண்டிருக்கும். அத்தெருவின் மத்தியில் ஒரு பிள்ளையார் கோவிலும் உள்ளது.
                         அன்று அவன் அந்தத் தெருவில் நுழைகின்ற போதே பக்தி பாடல்களின் சப்தம் காதைப் பிளக்கின்றது. காரணம் என்ன என்று பார்த்தால் அன்று அந்தக் கோவிலில் திருவிழா. வாகனங்கள் அத்தெருவிற்க்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆங்காங்கே இரவுக்கான மின் விளக்குகள் அமைத்துக் கொண்டும், அங்கு உள்ள மரங்களில் ஏறி ஆட்கள் பந்தல் வேலைகளை மும்மரமாய் பார்த்துக் கொண்டடும் இருந்தார்கள். அதனை கவனித்தவாரே நடந்து செல்கின்றான். கோவிலின் அருகில் வீதியுலா சப்பரம் அலங்கரிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. கோவிலில் பக்தர்கள் சூழ்ந்து கொண்டு விரதத்தில் மூழ்கிக் கிடந்தனர். அன்றைய நாள் கடந்தது.
                      அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் அந்தப் பக்கம் செல்லவில்லை. திங்கள் கிழமை காலையில் அலுவலகத்திற்கு செல்ல அந்தத் தெருவை நோக்கி நடக்க தொடங்கினான். திருவிழா முடிந்து ஒரு வழியாக மீண்டும் அந்த அமைதியான வனத்தில் நுழையும் ஆசையில் தெருவை அடைகிறான். சூரிய ஒளியே படாத அந்தத் தெருவில் எங்கும் வெய்யில் மண்டையை பிளந்தது. தெரு மாற்றி வந்து விட்டோமோ என்று ஒரு ஐயம் இருந்தது. தெருவெங்கும் கொழுந்து இலைகளும், கிளைகளும் வெட்டப்பட்டு கிடந்தன. பறவைகளின் கீச்சுக்கள் ஒப்பாரி போல காதில் கேட்கிறது. வெட்டப்பட்ட ஒவ்வொறு மரத்தின் அருகிலும் பறவைகளின் கூடுகள் அழிக்கப்பட்டு கிடந்தன. காக்கைகளும், குருவிகளும், தங்களின் உறைவிடத்தை இழந்து அந்தத் தெருவில் தன் குஞ்சுகளை தேடி அலைந்து கொண்டிருந்தன. மனது ஒரு கணம் வலித்தது. இந்தப் பறவைகள் அந்தக் கூட்டினைக் கட்ட என்னப் பாடுபட்டிருக்கும் என்று கோபத்துடன் நடக்கும் போது ஒருவர் கைகளில் எதையோ கொண்டு குப்பைத் தொட்டியில் போடுகிறார். என்னவென்று பார்த்தால் இறந்து போன இளம் காக்கை குஞ்சுகள். கண்களில் கண்ணீர் வரத் துவங்கியது. கோபம் தலைக்கேறி அருகில் உள்ள பெரியவரிடம் விசாரிக்கச் சென்றான்.
                        பெரியவர் அவருடைய மங்கலான கண்ணாடியை தோளில் கிடக்கும் துண்டால் துடைத்து விட்டு அண்ணாந்து அவனை நோக்கி பார்த்து என்னப்பா தம்பி என்ன வேண்டும் என கேட்க …
     அவன் “அய்யா ஏன் இங்க மரங்களெல்லாம் வெட்டிப் போட்டுருக்காங்க”
                    “அதுவாப்பா, ரெண்டு நாளா கோவில் திருவிழால்ல. தெருவுல பந்தல் போட, அப்புறம் சப்பரம் போக எடஞசலா இருந்ததால இங்க இருக்கிற மரத்த எல்லாம் பாவிப் பயலுக வெட்டிப் போட்டானுங்கப்பா… நான் தெனமும் இந்த மரத்தடி நெழலுதான் காத்தாட உட்காந்து இருப்பேன் …. இனிமே எங்க போயி உட்கார”
இந்த மாசம் என்னய்யா திருவிழா?
                பெரியவர் கிண்டலாக சிரித்துக்கொண்டு “அதுவா, இந்த ஊர்ல மழையே பெய்ய மாட்டேனுங்குதாம். இந்த சாமி எனக்கு திருவிழா நடத்து நான் மழை தாரேனு சொல்லுச்சாம். அதான் மரத்தை எல்லாம் வெட்டிப் போட்டு மழைய கேட்கிறானுங்க மடப்பயலுக. தம்பி இவனுங்க மரத்த வெட்டி மழைய கேட்பானுங்க, சாமி கொடுத்துட்டுதானே மறு வேல பார்க்கும் பாருங்க. எப்பத்தான் திருந்தப் போகுறாங்களோ இந்த மெத்தப் படித்த மேதாவிங்க….
           
                      இந்த மாக்களை நினைத்து வறுத்தப்படுவதா இல்லை வேதனைப்படுவதா என்று மனதில் முனுமுனுத்துக்கொண்டே அவன் தன் அலுவலகம் நோக்கி நடக்கும் போதே பெரிய கட் அவுட் ஒன்று தென்பட்டது. “மழை வேண்டி விரதம்” என்று நான்கைந்து தலைகள் செல்போன் வைத்த மாதிரி போஸ் வேரு …. சகிக்க முடியாமல் அன்றிலிருந்து இந்த தெருப் பக்கம் வரக்கூடாது என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு நடக்கும் பொது அவனுக்கு தான் எழுதிய பூமாதேவியின் புலம்பல்களுடன் கூடிய சில வரிகள் நியாபகம் வந்தது.

எதிர் காலத்த புரிஞ்சி நடந்துக்க எம்மவனே,
தினம் பாரஞ் சுமக்க முடியலடா எம்மவனே,
நாட்டு நடப்பு புரியலடா எம்மவனே,
நாளும் பொழுதும் ஓடுதடா எம்மவனே,
கூறு போட்டு பிரிச்சிட்டியே எம்மவனே,
கூவி கூவி வித்துட்டியே எம்மவனே,
அடுக்கடுக்க கட்டுறியே எம்மவனே,
எத்தனைய தாங்குவேண்டா எம்மவனே,
காடு மரம் போயிடுச்சே எம்மவனே,
காத்து மழை ஓடிடுச்சே எம்மவனே,
நாக்கு வறண்டு துடிக்கிறேண்டா எம்மவனே,
ஒத்தையிலே புலம்புறேண்டா எம்மவனே,
வெக்கையில வேகுறேண்டா எம்மவனே,
வேதனையில் சுத்துறேண்டா எம்மவனே,
கோபத்துல எரியுறேண்டா எம்மவனே,
சோகத்துல மிதக்குறேண்டா எம்மவனே,
தூங்கக்கூட முடியலடா எம்மவனே,
இப்போ பாடையில போகுறேண்டா எம்மவனே…

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

கவி தை



உன்னால் நான் கவியானேன்
என்னால் நீ கவிதையானாய்…

ஆத்திச்சூடி-2012


அன்பை விதைத்து நீரிடு – அதில்
ஆணவம் புதைத்து மூடிடு
இலக்கை நோக்கி விரைந்திடு – உனை
ஈன்றவள் கால்களை தொழுதிடு
உண்மை வென்றிட உரமிடு
ஊழல் களைகளை தகர்த்திடு
எண்ணம் உயர்ந்திட படித்திடு
ஏற்றம் அடைந்திட உழைத்திடு
ஐயம் நீங்கிட தெளிந்திடு
ஒழுக்கம் சேர்ந்திட உதவிடு
ஓசை கேட்டிட முழங்கிடு
ஔவைத் தமிழை வணங்கிடு

வாழ்க்கையில் நேரம்


வாழ்க்கையில் நேரம் நேரம்;
ஓடுதே தூரம் தூரம்
தோளிலே மேலும் மேலும்;
கூடுதே பாரம் பாரம்
நேற்று பிறந்து,
இன்று வளர்ந்து,
நாளை மடியும்
வாழ்க்கையில் நேரம் நேரம்;
ஓடுதே தூரம் தூரம்
தோளிலே மேலும் மேலும்;
கூடுதே பாரம் பாரம்
வாழ்க்கை என்றும் இன்பம்தான் – அதில்
வாழும் மனிதர் கொஞ்சம் தான்.
வேட்க்கை என்றும் துன்பம் தான் – அதில்
மீளும் மனிதர் கொஞ்சம் தான்.
அச்சம் மனதிலே புலம்பிடும்
ஆசை கனவிலே கலைந்திடும்
காலம் வேகமாய் கடந்திடும்
காதல் ஓரமாய் கிடந்திடும்
நேற்று பிறந்து,
இன்று வளர்ந்து,
நாளை மடியும்
வாழ்க்கையில் நேரம் நேரம்;
ஓடுதே தூரம் தூரம்
தோளிலே மேலும் மேலும்;
கூடுதே பாரம் பாரம்
வாழும் நாட்கள் கொஞ்சம் தான் – அதில்
ஆடும் நாட்கள் இன்பம் தான்.
தேடும் நாட்கள் கொஞ்சம் தான் – அதில்
ஓடும் நாட்கள் துன்பம் தான்.
நாட்கள் இரவிலே முடிந்திடும்
பூக்கள் காம்பிலே இறந்திடும்
வறுமை ஏழையை குடைந்திடும்
பொறுமை கோழையை சிதைத்திடும்

மரணத்தின் வலி















இதயம் சற்று
வேகமாய் துடிக்கிறது,
கண்ணுக்கெட்டிய
தொலைவு வரை
யாதும் புலப்படவில்லை.
கால்கள் ஓடிய
பாதை மறந்தது
ஈனஸ்வரத்தின்
கூச்சல் கேட்டிட
இமைகளுக்குள்ளே
ஈரம் கசிந்தது.
ஆறுதல் கூறிட
வார்த்தைகள் போரிட
காற்றின்றி அனைய
மறுக்கிறது தீபம்
மழையின்றி நனைய
மறுக்கிறது மீரம்
இறுக்கம் கைகளில்
இருட்டும் கண்களில்
மனமே ஆறிடு
இமையே மூடிடு
விருப்பம் இன்றி
மூச்சும் குன்றி
இதயம் துடித்து
முடிவாய் நின்றது

இங்கும் அங்கும்



முகவரி தந்தாய்
நிமிடங்கள் கொல்ல
இரு விழிச் சுடர்
வளைக்குது மெல்ல
குளிர்ச்சிகள் கண்ணில்
குழப்பங்கள் நெஞ்சில்
மறந்திட எண்ணி
மறைகிறாய் கண்ணில்
இறக்கங்கள் இன்றி
இறக்கிறேன் மண்ணில்
உறவுகள் இல்லை
உரிமைகள் இல்லை
இரவுகள் எல்லாம்
உறக்கங்கள் இல்லை; 
கனவுகள் எல்லாம்
தருகிறாய் தொல்லை
முறை தானோ!
சிரிப்பதும் நீயே!
முறைப்பதும் நீயே!
நினைவுகள் எங்கும்
திரிவதும் நீயே!
நீ மட்டும் தூங்கு நலமாக!

சொல்வதெல்லாம் உண்மை




பார்த்தா தான் அது கண்ணு;
சிரிச்சா தான் அது பொண்ணு

பசிச்சா தான் அது வயிறு;
போனா தான் அது உயிரு

கேட்டா தான் அது காது;
கெடுத்தா தான் அது சூது

விரிச்சா தான் அது பாயி;
கொலச்சா தான் அது நாயி

இனிச்சா தான் அது நாக்கு;
பலிச்சா தான் அது வாக்கு

கடிச்சா தான் அது பல்லு;
வளைச்சா தான் அது வில்லு

நடந்தா தான் அது காலு
திரிஞ்சா தான் அது பாலு

கொடுத்தா தான் அது கையி;
தெளிச்சா தான் அது மையி

கோர்த்தா தான் அது மாலை;
வேர்த்தா தான் அது வேலை

சேர்த்தா தான் அது காசு;
சேர்ந்தா தான் அது தூசு

பறந்தா தான் அது பருந்து;
கசந்தா தான் அது மருந்து

பிரிச்சா தான் அது பாகம்;
பிரிஞ்சா தான் அது சோகம்

வடிச்சா தான் அது சோறு;
புளிச்சா தான் அது மோரு

உரிச்சா தான் அது தோலு;
அரைச்சா தான் அது தூளு

பதிச்சா தான் அது பேரு;
பதிஞ்சா தான் அது தேரு

விட்டா தான் அது நட்டம்;
தொட்ட தான் அது மட்டம்

விழுந்தா தான் அது மழ;
எழுந்தா தான் அது வெத

குடிச்சா தான் அது தண்ணி;
குளிக்காட்டி அது பண்ணி

புரிஞ்சா தான் அது நட்பு;
புரியாட்டி அது தப்பு

அலுவலகம்


இருக்கை எழவில்லை
தூக்கம் இரவில்லை

கையில் விழங்கில்லை
கம்பிச் சிறையில்லை

காற்றுக் கிடமில்லை
அறிவுத் தடமில்லை

அன்புக் கரமில்லை
அடிமை அழவில்லை

கற்றும் பயனில்லை
ஏற்றம் தரமில்லை

வேஷம் பிழையில்லை
தேசம் நினைவில்லை

வீணாய் போன பொழுதுகள்


நடந்து முடிந்ததை நினைத்து நினைத்து
பொழுதும் வீணாய் போகிறது
நடக்க இருப்பதை நினைத்து நினைத்து
மனதும் பாழாய் போகிறது

எதனை கடந்தோம் இன்று வரை
எதனை முடித்தோம் இன்று வரை

குறைகளை சொல்லி சொல்லி
அவைகளே எஞ்சிக் கிடக்கிறது
புண்ணியம் தேடித் தேடி
புண்களே மிஞ்சிக் கிடக்கிறது

வலிகளை சுமக்கிறவன்
வாழ்க்கையை ரசிக்கிறான்
விழிகளை ரசிக்கிறவன்
வாழ்க்கையை சுமக்கிறான்

மெய்களை பொசுக்கி பொசுக்கி
பொய்களில் பரவிக் கிடக்கிறோம்
அமைதியை பழக்கி பழக்கி
அகதியாய் அஞ்சிக் கிடக்கிறோம்

ஆசைகளை துறந்தவன்
வீதிகளில் அலைகிறான்
வீதிகளில் அலைகிறவன்
ஆசைகளில் புரளுகிறான்

அடிமையைப் போலவே நாளும் உழைப்பவன்
மெழுகினைப் போலவே நாளும் கரைகிறான்
ஆதவன் போலவே நாளும் எழுபவன்
வாரிதம் போலவே இறுதியில் கலைகிறான்

இதுதான் முடிவா?


தெரிந்தும் படவில்லை கண்ணில்-பின்
தொடர்ந்தும் தடமில்லை மண்ணில்
மறந்தும் அழவில்லை
முறிந்தும் விழவில்லை
எரிந்தும் சுடவில்லை
அணைந்தும் விடவில்லை
எதுவும் எனக்கில்லை என்று
புரிந்தும் மனமில்லை இன்று
எதுவும் அதுவாக இல்லை
அதுவும் முடிவாக இல்லை

நாட்குறிப்பு

 
உன்
வருகை,
சிரிப்பு,
தும்மல்,
கோபம்,
வெட்கம்,
குறும்பு,
அச்சம்,
அன்பு,
மௌனம்
இவைகள் யாவும் இங்கே
அழகாய் பதிக்கபட்டிருக்கும்
யாருக்கும் தெரியாத மொழிகளில்……