செவ்வாய், 20 நவம்பர், 2012

லட்சியம்




நன்மை செய்திடுவோம் - புது
வன்மை செய்திடுவோம்
அன்றே செய்திடுவோம் - படை
முன்பே சென்றிடுவோம்

நமக்கென்று வாழ்வதில்
பயனேதுமில்லை
பிறர்க்கென்று சாவதில்
பிழையேதுமில்லை

முன்னேறும் எண்ணமில்லாமல்
முடியும்வரை வேகமில்லாமல்
எதையு மெதிர்க்கும் துணிவு
சிறிது மிருக்காது நமக்கு

எதுவும் செய்யாது நாம்
எதையும் எதிர்பார்க்க முடியாது

விரும்பிச் செய்திடுவோம் - கருமம்
விரைந்து முடித்திடுவோம்
கடந்து சென்றிடுவோம் - துயர்
மறந்து வென்றிடுவோம்

லட்சியம் வென்றிட
நிச்சயம் வீழ்ந்திடுவோம்
லட்சியம் வென்றிட
நிச்சயம் எழுந்திடுவோம்

ட்சியமில்லாத வாழ்வு
இறப்பிற்கு சமானம்
பலவீனமான இணைப்பாய்
இருப்பதை தவிர்ப்போம்

முன்னேறும் எண்ணமில்லாமல்
முடியும்வரை வேகமில்லாமல்
எதையு மெதிர்க்கும் துணிவு
சிறிது மிருக்காது நமக்கு

புதன், 14 நவம்பர், 2012

கற்றோம், கற்கிறோம், கற்போம்


மயக்கச் சொல்கிறது மல்லிகை
சிவக்கச் சொல்கிறது வெற்றிலை

விரும்பச் சொல்கிறது காதல்
வெறுக்கச் சொல்கிறது ஊடல்

நெளியச் சொல்கிறது நதி
ளியச் சொல்கிறது நிலா

வளையச் சொல்கிறது வில்
அலையச் சொல்கிறது காற்று

மாறச் சொல்கிறது மாற்றம்
தேறச் சொல்கிறது வீழ்ச்சி

மறக்கச் சொல்கிறது மனம்
மரிக்கச் சொல்கிறது மானம்

பிழைக்கச் சொல்கிறது வாய்ப்பு
இழக்கச் சொல்கிறது பயம்

சுடச் சொல்கிறது நெருப்பு
விடச் சொல்கிறது வெறுப்பு

ஓடச் சொல்கிறது நேரம்
கூடச் சொல்கிறது மேகம்

தேடச் சொல்கிறது கண்
மூடச் சொல்கிறது மண்

விழச் சொல்கிறது மழை
எழச் சொல்கிறது விதை

கற்றோம், கற்கிறோம், கற்போம்

திங்கள், 12 நவம்பர், 2012

அழகும் அமைதியும்











அற்புதமான தருணம் அது.......
உன்னோடு
நெடுந்தூரப் பயணம் செய்த
அச்சிறு நொடிகள்
-
எப்போது
நினைவில் வந்தாலும்
ஒரு நொடி சந்தோசத்துடன்
ஒரு துளி கண்ணீரையும்
பரிசளித்திடும்
எனக்கு
-
நிழல் போல் எத்தனை முறை
பின் தொடர்ந்திருப்பேன்
பிறை போல் எத்தனை முறை
எதிர் வந்திருப்பேன்
-
உன் அத்தனை
பாவனைகளும்
ஆழப் பதிந்து விட்டது
என் நெஞ்சில்
-
அவற்றில் சில
புன்னகைகள்
இன்றும் என் பிணிக்கு மருந்துதான்
-
அவற்றில் சில
கோபங்கள்
இன்றும் என் வழிக்கு வெளிச்சம்தான்
-
ஈரம் கசிந்த அந்தப்
பார்வை ஒன்றுதான்
என்றும் என்னைக்
காயப்படுத்திக் கொண்டே
இருக்கின்றது.
-
உன் நெற்றியின் பொட்டாக
உலகம் சுருங்கி விட்டது
எனக்கு.
-
மிக்க நன்றி
என் வாழ்வில்
வந்தமைக்கு
-
இனி என்றும் பூக்காது
உன்போல் பூக்கள் இங்கு
-
என்ன தவம் செய்யவில்லை
நீயும் நானும்


சனி, 3 நவம்பர், 2012

என் கிராமத்தின் நுழைவாயில்















அன்றிரவு
தூறிக் கொண்டிருந்தது
சல்லடை மழை
-
காற்றும் மரமும்
ஏனோ அங்கே
பேசிக்கொள்ளவில்லை
-
மழையுடன் சண்டையிட்டு
புண்ணாய்ப் போன
அந்த நெடிய பாதையில்
துணையாய் வந்த
பிறை நிலவும்
துளி நேரத்தில்
திருடப்பட்டது
-
யாருமற்ற அந்த வழியில்
யாருக்காகவோ
விழித்திருந்தன
பார்வை மங்கிய
சாலையோர மின் விளக்குகள்
-
எல்லோரையும்
அன்புடன் வரவேற்கும்
என் கிராமத்தின்
நுழைவாயில்
அன்று என்னையும்
வரவேற்றது
உடைந்து போன
பெயர்ப் பலகையுடன்

வெள்ளி, 2 நவம்பர், 2012

வரம் கொடு


நீ இன்றி அலைகிறேன் – இந்த உலகிலே
தீ இன்றி எரிகிறேன் – பனி இரவிலே
-
உலகமே விடிந்தது உன் வருகையில் – என்
இதயமே குளிர்ந்தது நீ சிரிக்கையில்
உதிரமே உறைந்தது உனை நினைக்கையில்
நின்னுருவமே பிறந்தது கிறுக்கையில்
-                                      
பூ ஒன்று விழுந்தது எந்தன் விழியிலே
நீ என்று புரிந்தது அந்த நொடியிலெ……..
-
விண்ணிலே மின்னுகின்ற விண்மீனெல்லாம் – உந்தன்
கண்ணில் கண்டேன் அன்பே கண்ணில் கண்டேன்.
கண்களில் கலந்திருந்த சோகமெல்லாம்
விண்ணில் கண்டேன் அன்பே விண்ணில் கண்டேன்
-
மனதில் சிறிதாய் மலர்கள் மலர்ந்திட
இடம் கொடு கொஞ்சம் உரமிடு
கனவில் உன்னுடன் பழகி கழித்திட
வரம் கொடு உந்தன் கரம் கொடு