செவ்வாய், 18 டிசம்பர், 2012

காற்றோடு சண்டை
















சிரிக்கிறாய்
அனலாய்
முறைக்கிறாய்,
-
அழைக்கிறாய்
விழியால்
வளைக்கிறாய்,
-
தெரிகிறாய்
பின்
மறைகிறாய்,
-
கொடுக்கிறாய்
பின்
பறிக்கிறாய்,
-
என்ன செய்வதாக உத்தேசம்…
-
ஆற்றோடு அன்பை விட்டாயோ,
காற்றோடு சண்டை இட்டாயோ…
-
விதைக்கிறாய்
மனதை
கரைக்கிறாய்,
-
வதைக்கிறாய்
கனவை
சிதைக்கிறாய்,
-
நெருங்கினாய்
சொல்லத்
தயங்கினாய்
-
விரும்பினாய்
பின்
விலகினாய்
-
குழம்பினாய்
பின்
கலங்கினாய்,
-
என்ன ஆனது உனக்கு…
-
ஆற்றோடு அன்பை விட்டாயோ,
காற்றோடு சண்டை இட்டாயோ

சனி, 8 டிசம்பர், 2012

அழையா விருந்தாளிகள்













அந்த கடற்கரையின்
புழுதி கிளம்பாத
ஈரமணலில்
என்னை நானே தொடர்கின்றேன்
-
அலையும் கடலெச்சத்தில்
என் கால்கள் இரண்டையும்
அவிழ்த்து விட
துள்ளிக் குதித்தன அவைகள்
-
ஐம்புலன்களும்
நனைந்து நடுங்கிட
ஈர உடலில்
காதல் கொண்ட கீழைக் காற்று
மெல்ல அனணத்தது
-
பற்கள் கட கட
சொற்கள் தட தட
உள்ளங்கைகளில்
நெருப்பினை கொடுத்தாலும்
பொக்கிசமாய்
பொத்திக் கொள்வேன் போல
அப்படி ஓர் குளிர்
-
அவ்விடம் விட்டு
நகர்கிறேன்
அழையாது ஒட்டிக்கொண்ட
களவாணி மணல் துகள்களை
என்ன செய்வது…
-
தட்டி விட மனமில்லை
ஆகவே உடனழைத்துச் சென்றேன்
என்றும் மிதிக்கப்படும்
அவர்கள்
அன்று மதிக்கப்பட்டு
என் வீட்டின் விருந்தாளி ஆனார்கள்….

அதே இடம் அதே நொடி












நீ அங்கே வரக்கூடும் என்பதால்
நானும் அங்கு இருப்பேனோ
என்று உன் உள் மனம் வேகமாய்
அசை போட்டுக்கொண்டிருக்கும்
-
இன்று என்ன செய்யலாம்!!!
பார்த்தால் பார்க்கலாமா? பதுங்கலாமா?
சிரித்தால் சிரிக்கலாமா? சுளிக்கலாமா?
என பூவா தலையா? போட்டுக்கொண்டே
பூவும் தலையுடன்
அவ்விடம் நோக்கி வந்துகொண்டிருப்பாய்
-
கூட்டத்தில் நான் தேடிடக்கூடும்
என்பதற்க்காகவே எப்போதும் உடுத்தும்
அந்த நீல வண்ணச் சேலையில்
அவ்விடம் நெருங்கிடுவாய்
-
ஆயிரம் சப்தங்கள் காதைத் துளைத்திடும் போதும்
அந்த இடத்தில் உன் மூச்சின் ஓசை எப்படியோ
எனக்கு கேட்டுவிடுகின்றது
நீ காட்டிக் கொடுக்கப்படுகின்றாய்
-
நெடு நேரங்கள்
நீ பார்த்திடும் போது நானும்
நான் பார்த்திடும் போது நீயும்
பார்த்துக்கொள்வதில்லை
-
முடிவாய் நீயும் நானும்
நேர்கோட்டில் பார்த்துக்கொள்ளும்
அச்சிறு நொடிகளால்
அன்றைய தினம்
அன்றைய கணம்
நீயும் நானும் நாமகிவிடுகிறோம்
-
இதுபோதுமென்று
மனங்கள்
அமைதியாய் உறங்கிடும்
நாளைக்கான
அதே இடத்தில்
அதே நொடிக்காக

செவ்வாய், 20 நவம்பர், 2012

லட்சியம்




நன்மை செய்திடுவோம் - புது
வன்மை செய்திடுவோம்
அன்றே செய்திடுவோம் - படை
முன்பே சென்றிடுவோம்

நமக்கென்று வாழ்வதில்
பயனேதுமில்லை
பிறர்க்கென்று சாவதில்
பிழையேதுமில்லை

முன்னேறும் எண்ணமில்லாமல்
முடியும்வரை வேகமில்லாமல்
எதையு மெதிர்க்கும் துணிவு
சிறிது மிருக்காது நமக்கு

எதுவும் செய்யாது நாம்
எதையும் எதிர்பார்க்க முடியாது

விரும்பிச் செய்திடுவோம் - கருமம்
விரைந்து முடித்திடுவோம்
கடந்து சென்றிடுவோம் - துயர்
மறந்து வென்றிடுவோம்

லட்சியம் வென்றிட
நிச்சயம் வீழ்ந்திடுவோம்
லட்சியம் வென்றிட
நிச்சயம் எழுந்திடுவோம்

ட்சியமில்லாத வாழ்வு
இறப்பிற்கு சமானம்
பலவீனமான இணைப்பாய்
இருப்பதை தவிர்ப்போம்

முன்னேறும் எண்ணமில்லாமல்
முடியும்வரை வேகமில்லாமல்
எதையு மெதிர்க்கும் துணிவு
சிறிது மிருக்காது நமக்கு

புதன், 14 நவம்பர், 2012

கற்றோம், கற்கிறோம், கற்போம்


மயக்கச் சொல்கிறது மல்லிகை
சிவக்கச் சொல்கிறது வெற்றிலை

விரும்பச் சொல்கிறது காதல்
வெறுக்கச் சொல்கிறது ஊடல்

நெளியச் சொல்கிறது நதி
ளியச் சொல்கிறது நிலா

வளையச் சொல்கிறது வில்
அலையச் சொல்கிறது காற்று

மாறச் சொல்கிறது மாற்றம்
தேறச் சொல்கிறது வீழ்ச்சி

மறக்கச் சொல்கிறது மனம்
மரிக்கச் சொல்கிறது மானம்

பிழைக்கச் சொல்கிறது வாய்ப்பு
இழக்கச் சொல்கிறது பயம்

சுடச் சொல்கிறது நெருப்பு
விடச் சொல்கிறது வெறுப்பு

ஓடச் சொல்கிறது நேரம்
கூடச் சொல்கிறது மேகம்

தேடச் சொல்கிறது கண்
மூடச் சொல்கிறது மண்

விழச் சொல்கிறது மழை
எழச் சொல்கிறது விதை

கற்றோம், கற்கிறோம், கற்போம்

திங்கள், 12 நவம்பர், 2012

அழகும் அமைதியும்











அற்புதமான தருணம் அது.......
உன்னோடு
நெடுந்தூரப் பயணம் செய்த
அச்சிறு நொடிகள்
-
எப்போது
நினைவில் வந்தாலும்
ஒரு நொடி சந்தோசத்துடன்
ஒரு துளி கண்ணீரையும்
பரிசளித்திடும்
எனக்கு
-
நிழல் போல் எத்தனை முறை
பின் தொடர்ந்திருப்பேன்
பிறை போல் எத்தனை முறை
எதிர் வந்திருப்பேன்
-
உன் அத்தனை
பாவனைகளும்
ஆழப் பதிந்து விட்டது
என் நெஞ்சில்
-
அவற்றில் சில
புன்னகைகள்
இன்றும் என் பிணிக்கு மருந்துதான்
-
அவற்றில் சில
கோபங்கள்
இன்றும் என் வழிக்கு வெளிச்சம்தான்
-
ஈரம் கசிந்த அந்தப்
பார்வை ஒன்றுதான்
என்றும் என்னைக்
காயப்படுத்திக் கொண்டே
இருக்கின்றது.
-
உன் நெற்றியின் பொட்டாக
உலகம் சுருங்கி விட்டது
எனக்கு.
-
மிக்க நன்றி
என் வாழ்வில்
வந்தமைக்கு
-
இனி என்றும் பூக்காது
உன்போல் பூக்கள் இங்கு
-
என்ன தவம் செய்யவில்லை
நீயும் நானும்


சனி, 3 நவம்பர், 2012

என் கிராமத்தின் நுழைவாயில்















அன்றிரவு
தூறிக் கொண்டிருந்தது
சல்லடை மழை
-
காற்றும் மரமும்
ஏனோ அங்கே
பேசிக்கொள்ளவில்லை
-
மழையுடன் சண்டையிட்டு
புண்ணாய்ப் போன
அந்த நெடிய பாதையில்
துணையாய் வந்த
பிறை நிலவும்
துளி நேரத்தில்
திருடப்பட்டது
-
யாருமற்ற அந்த வழியில்
யாருக்காகவோ
விழித்திருந்தன
பார்வை மங்கிய
சாலையோர மின் விளக்குகள்
-
எல்லோரையும்
அன்புடன் வரவேற்கும்
என் கிராமத்தின்
நுழைவாயில்
அன்று என்னையும்
வரவேற்றது
உடைந்து போன
பெயர்ப் பலகையுடன்

வெள்ளி, 2 நவம்பர், 2012

வரம் கொடு


நீ இன்றி அலைகிறேன் – இந்த உலகிலே
தீ இன்றி எரிகிறேன் – பனி இரவிலே
-
உலகமே விடிந்தது உன் வருகையில் – என்
இதயமே குளிர்ந்தது நீ சிரிக்கையில்
உதிரமே உறைந்தது உனை நினைக்கையில்
நின்னுருவமே பிறந்தது கிறுக்கையில்
-                                      
பூ ஒன்று விழுந்தது எந்தன் விழியிலே
நீ என்று புரிந்தது அந்த நொடியிலெ……..
-
விண்ணிலே மின்னுகின்ற விண்மீனெல்லாம் – உந்தன்
கண்ணில் கண்டேன் அன்பே கண்ணில் கண்டேன்.
கண்களில் கலந்திருந்த சோகமெல்லாம்
விண்ணில் கண்டேன் அன்பே விண்ணில் கண்டேன்
-
மனதில் சிறிதாய் மலர்கள் மலர்ந்திட
இடம் கொடு கொஞ்சம் உரமிடு
கனவில் உன்னுடன் பழகி கழித்திட
வரம் கொடு உந்தன் கரம் கொடு

வியாழன், 25 அக்டோபர், 2012

தங்கை…


















தங்கை என்ற உறவில்
அன்பாய் வந்த மங்கை நீ
அண்ணா என்று நீ – தினம்
அன்பாய் அழைத்திட
தங்கை என்றுனை
தத்துக்கொண்டேன்

முகமறியா நட்பில்
உன் அன்னைக்கு நானும்
என் அன்னைக்கு நீயும்
பிள்ளைகள் ஆனோம்

அண்ணா என்று நீ – தினம்
அன்பாய் முளைத்திட
முடிவில்லா இன்பத்தில்
முழுமூச்சும் மிதக்கிறது

என் எழுத்துக்களின் வழியே
நித்தமும் நீ நத்தையாய்
நடப்பதும்

என் எதுகையின் எதிரே
நித்தமும் நீ மோனையாய்க்
கிடப்பதும்

உனக்கின்பமெனில்
ஓயாமல் எழுதிடுவேன்
நீ மகிழ

உன் உறவு தந்த தமிழுக்கு
உருவம் தருகிறேன்
என் கவிதையின் மூலம்

விண் நிலவு தந்த இரவுக்கு
விடியல் தருகிறேன்
என் கண்களின் மூலம்

பிள்ளைத் தமிழில்
அண்ணா என்று நீ தினம்
அன்பாய்திக்கிட
உன் மெய்யான பேரன்பில்
நான் சிக்கிக் கொண்டேன்

என் குட்டிக் கவிதையை
நீ நித்தம் படிப்பதால்
தலை முட்டிக் குடைந்து
இக்குட்டிக் கவிதையை
தட்டித் தருகிறேன்
தங்கை உனக்கு…

கரும்பலகை


வெண்ணிற வார்த்தைகள்
பூத்திடும் நந்தவனமே
செந்நிற சிந்தனைகள்
சிந்திடும் தார்ச் சாலையே
எழுத்துக்கள் பிறப்பதும் தவழ்வதும்
கருத்துக்கள் வளர்வதும் செறிவதும்
கவிஞகர்கள் நடப்பதும் கடப்பதும்
கவிதைகள் உதிப்பதும் திரிவதும்
கற்பனைகள் அவிழ்வதும் தெறிப்பதும்
சாத்திரங்கள் அழிவதும் உடைவதும்
அறியாமை களைவதும்
அடங்காமை அணைவதும் வேறெங்கே
களிமண்ணும் கருங்கல்லும்
உன் வழித்தோன்றல்கள்
முதுகும் மேதியும்
உன் தடக் கூற்றுக்கள்
தென்னங்கீற்றும் பணையோலையும்
உன் முப்பாட்டன்கள்
வெள்ளி முளைக்கும் வானம் நீ
வாசல் தெளிக்கும் வீதி நீ
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
நம் தலைஎழுத்தும் வாழுதிங்கே
கட்டைவிரலும் சுட்டுவிரலும் ஆடுதிங்கே
முன் எத்தனையோ நாட்கள்
சிலேடும் மாக் குச்சியும்
தான் என் பால்ய நண்பர்கள்
என் எச்சில் பட்டே குளிப்பாய்
என் குட்டிப் பையில் கிடப்பாய்
மடியிலிட்டும், மண்டியிட்டும்,
உன்னில் எழுதிருக்கிறேன்
இனி காகிதமும் தூரிகையும்
தான் இரவும் பகலும்
என் உடன் விழித்திருக்கும்
வாலிப நண்பர்கள்
இன்றும் நினைவில் இருக்கிறது
“அ” பழகிய அந்த காலம்

நீயும் நீரும்











நீர் இன்றி தீராதோ தாகம்
நீ இன்றி போகாதோ நேரம்
விக்கலுக்கு நீர் போல்-மன
சிக்கலுக்கு நீ வேண்டும்

நீர் இன்றி பூக்காதோ பூக்கள்
நீ இன்றி தோன்றாதோ பாக்கள்
சித்திரைக்கு நீர் போல்-என்
நித்திரைக்கு நீ வேண்டும்

நீர் இன்றி அனையதோ நெருப்பு
நீ இன்றி குறையாதோ வெறுப்பு
கல்லனைக்கு நீர் போல்-என்
சிந்தனைக்கு நீ வேண்டும்

 நீர் இன்றி அமையாது உலகு-என்றும்
நீ இன்றி அடங்காது உயிரு

நீரும், நீயும் என் நீங்கா உறவுகள்

நீ நலமில்லை….
















எப்படி அறிவேன்
நீ நலமில்லை என்பதை
நீ வெறுத்துக் கொண்டே இருந்ததால்
நானும் பொறுத்துக் கொண்டே இருந்துவிட்டேன்
-
யாரென்ன சொன்னார்கள் உன்னை
யார்க்கும் தெரியாதே நீயும் நானும்
நெடுநாட்களாய் பேசிக்கொள்வதில்லை என்று
-
தற்செயலாய் தென்பட்ட உன் நாட்குறிப்பு
சொல்கிறது நீ நலமில்லை என்பதை
-
தூக்கத்திற்கு மருந்துன்பாய் இப்போது
துக்கத்திற்குமா?
-
மனம் விட்டு பேசேன்
என்னிடம்
நோய் விட்டுப் போய்விடும்
-
யாருமில்லை உனக்கு
என்னைத் தவிர
அடம் வேண்டாம்
இப்போது நீ நலமில்லை
-
ஆசைதான் எனக்கு உன்னை
உள்ளங்கையில் தாங்கிட
எப்படியோ போய்க் கொண்டிருக்கின்றது
நம் வாழ்க்கை
-
எத்தனை நாட்கள் தனியே புலம்பிடுவாய்
உன் நாட்குறிப்பில்
அது கேட்க மட்டுமே செய்யும்.
-
யாருமில்லை உனக்கு என்னைத் தவிர
அடம் வேண்டாம்
நீ இப்போது நலமில்லை
-
நான் யாரோ இல்லை நீதான்
கண் கொண்டு பார்
மனம் விட்டு பேசேன்
என்னிடம்
நோய் விட்டுப் போய்விடும்
கண்ணீராவது விடு
அதை துடைக்கும் சாக்கில்
நானே உன்னிடம் பேசுகின்றேன்
அடம் வேண்டாம்
இப்போது நீ நலமில்லை

அந்திவேளை



கவலை மறந்து
கண்கள் ஒய்ந்திடும் நேரம்
பசியை மறந்து
கனவுகள் போயிடும் தூரம்
-
கையில் பணமின்றி
காலில் பலமின்றி
பசியும், நோயும்
வந்தால் தூக்கமேது
இந்த அந்திவேளையில்
-
என்றுமே கண்டிராத நள்ளிரவு
நிலவும் இல்லாத பின்னிரவு
நொடிகள் கூட
யுகங்கள் போல நகர்கிறது
குவளை தண்ணீர்
அமிர்தம் போல இனிக்கிறது
-
வழியெங்கும்
வாடை காற்று
தவளை கூச்சல்
ஆந்தை முறைப்பு
வவ்வால் ஆட்டம்
எல்லாம் நிலைக்கிறது
-
உணர்வின்றி புலம்பிடும்
உதடுகளில் ஈரமில்லை
தூக்கமின்றி கிறங்கிடும்
விழிகளில் ஊக்கமில்லை
-
பற்றிக்கொள்ள கிளையுமில்லை
பாதி உயிரும் உடம்பில்லை
-
சுமைகளைத் தாங்கிட
ஜீவனில்லாத உடலுக்கு
ஏன் இந்தப் பிறவியோ
-
பேசத் துணையின்றி
தேடத் திறனின்றி
பசியும் நோயும் வந்தால்
இந்த அந்திவேளை
எப்படி விடிந்திடும்
-
அநாதையாய் பிறந்திருந்தால்
என்றோ இறந்திருக்கலாம்

திங்கள், 15 அக்டோபர், 2012

கரும்பலகை

வெண்ணிற வார்த்தைகள்
பூத்திடும் நந்தவனமே
செந்நிற சிந்தனைகள்
சிந்திடும் தார்ச் சாலையே
எழுத்துக்கள் பிறப்பதும் தவழ்வதும்
கருத்துக்கள் வளர்வதும் செறிவதும்
கவிஞர்கள் நடப்பதும் கடப்பதும்
கவிதைகள் உதிப்பதும் திரிவதும்
கற்பனைகள் அவிழ்வதும் தெறிப்பதும்
சாத்திரங்கள் அழிவதும் உடைவதும்
அறியாமை களைவதும்
அடங்காமை அணைவதும் வேறெங்கே
களிமண்ணும் கருங்கல்லும்
உன் வழித்தோன்றல்கள்
முதுகும் மேதியும்
உன் தடக் கூற்றுக்கள்
தென்னங்கீற்றும் பணையோலையும்
உன் முப்பாட்டன்கள்
வெள்ளி முளைக்கும் வானம் நீ
வாசல் தெளிக்கும் வீதி நீ
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
நம் தலைஎழுத்தும் வாழுதிங்கே
கட்டைவிரலும் சுட்டுவிரலும் ஆடுதிங்கே
முன் எத்தனையோ நாட்கள்
சிலேடும் மாக் குச்சியும்
தான் என் பால்ய நண்பர்கள்
என் எச்சில் பட்டே குளிப்பாய்
என் குட்டிப் பையில் கிடப்பாய்
மடியிலிட்டும், மண்டியிட்டும்,
உன்னில் எழுதிருக்கிறேன்
இனி காகிதமும் தூரிகையும்
தான் இரவும் பகலும்
என் உடன் விழித்திருக்கும்
வாலிப நண்பர்கள்
இன்றும் நினைவில் இருக்கிறது
"அ" பழகிய அந்த காலம்

திங்கள், 8 அக்டோபர், 2012

அந்தக் கோபத்தின் நியாயம்....

 என்று உன்னோடு
 எனக்கு நன்கு பரிச்சயம்;
 உன்னைப் பற்றிய எனது
 புரிதல்கள் சில
 உண்மையாக இருக்கலாம்;
 அப்படி அவை உண்மையாக
 இருக்கும் பட்சத்தில்
 உன்னை நான் நன்கு
 உணர்ந்துள்ளேன் என்பதை அறிவாய்;
 ஓசை கேட்க்காமல்
 பேசுவதும், நடப்பதும்
 உனக்கு மட்டும் வழக்கமல்ல;
 வீடும், அலுவலகமும் மட்டுமே
 உனது நாட்களை
 எண்ணிக்கொன்டிருக்கின்றன என்று ஓடிக்கொண்டிருக்கின்றாய்;
 யாரையும் கண்டிராமல்
 எப்படி இந்த கூட்டத்தை கடந்திருப்பாய்;
 உலகம் வேகமாய்
 போய்கொண்டிருக்கின்றது என்பது
 உன்னை விட
 எனக்கு நன்கு தெரியும்;
 அடக்கமாக இருந்து பழகியதும்,
 ஆசையை மறைத்து புலம்பியதும்
 உன் தவறில்லை;
 வறுமையும், கடமையும்;
 அச்சமும், வெட்கமும்
 கொஞ்சம் அதிகமாய்
 இருந்ததும் உன் தவறில்லை;
 ஏதும் உரைத்திடவோ,
 உணர்த்திடவோ
 முடியாத் தருணம் ..
 நியாயம் தான்
 நின் கோபம் ….

நான் யாரோ தான் உனக்கு….


















யாரோ நீ என்று விலகி

இருக்க முடியவில்லை

நீயும் ஏன் ஓர் அநாதயாய்

பிறந்திருக்ககூடாது

பார்த்திடும் தூரத்திலே உன் விழி

கேட்டிடும் தூரத்திலே உன் செவி

சேர்ந்திடும் தூரத்திலே உன் விரல்

பழகிடும் தூரத்திலே உன் நட்பு

என்ன செய்திட முடியும் என்னால்

உன்னைச் சுற்றி எப்போதும்

உன் நண்பர்கள் கூட்டம்

நிழல் போல உன்னை

விட்டு பிரிவதில்லை

உள்ளங்கைகளில் உன்னை

முப்பொழுதும் தாங்குகிறார்கள்

நீ விக்கிடும் நேரத்திற்காய்

கழுகாய் காத்திருக்கிறார்கள்

உனக்கு பிடித்திடும் விசயங்களை

முந்திச்செய்கிறார்கள்

உன்னை தொட்டுசிரித்து

பேசிட நினைக்கிறார்கள்

ஆகவே உன் கண்களில் நான்

அகப்படமாட்டேன்.

அவர்கள் உன்னை வட்டமிடும்

விண்மீன்களாகத் தெரியலாம்

உனக்கு,

ஆனால் என் கண்களுக்கு

அவர்கள் வெறும் மேகங்களே,

சீக்கிரம் உன்னைக்கடந்து

மறைவார்கள்.

நீயும் ஏன் ஓர் அநாதயாய்

பிறந்திருக்ககூடாது

காற்றைப்போல்

என்றும் எங்கும்

சுதந்திரமாய்இரு….