செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மெத்தப் படித்த மேதாவிங்க

                        
                             அந்தத் தெரு கோடம்பாக்கத்தில் உள்ள முக்கியமான வசிப்பிடம். எப்பொழுதும் அவன் அந்த தெரு வழியாகத்தான் வீட்டிற்க்கு செல்வது வழக்கம். காரணம் அந்தத் தெருவின் உள்ளே நுழையும் போதே ஏகப்பட்ட பறவைகளின் சப்தமும், வேப்பம் பூக்களின் வாசமும் அவன் மனதை யாருமற்ற காட்டின் வழியே கொண்டுசெல்லும் ஒரு அற்புத உணர்வினைக் கொடுக்கும். தெருவின் இரு புறமும் அடர்ந்து ஓங்கிய மரங்கள் வெய்யிலின் கதிர்களை விரட்டி அடித்து எங்கும் நிழல்களைப் பரப்பிக் கொண்டிருக்கும். அத்தெருவின் மத்தியில் ஒரு பிள்ளையார் கோவிலும் உள்ளது.
                         அன்று அவன் அந்தத் தெருவில் நுழைகின்ற போதே பக்தி பாடல்களின் சப்தம் காதைப் பிளக்கின்றது. காரணம் என்ன என்று பார்த்தால் அன்று அந்தக் கோவிலில் திருவிழா. வாகனங்கள் அத்தெருவிற்க்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆங்காங்கே இரவுக்கான மின் விளக்குகள் அமைத்துக் கொண்டும், அங்கு உள்ள மரங்களில் ஏறி ஆட்கள் பந்தல் வேலைகளை மும்மரமாய் பார்த்துக் கொண்டடும் இருந்தார்கள். அதனை கவனித்தவாரே நடந்து செல்கின்றான். கோவிலின் அருகில் வீதியுலா சப்பரம் அலங்கரிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. கோவிலில் பக்தர்கள் சூழ்ந்து கொண்டு விரதத்தில் மூழ்கிக் கிடந்தனர். அன்றைய நாள் கடந்தது.
                      அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் அந்தப் பக்கம் செல்லவில்லை. திங்கள் கிழமை காலையில் அலுவலகத்திற்கு செல்ல அந்தத் தெருவை நோக்கி நடக்க தொடங்கினான். திருவிழா முடிந்து ஒரு வழியாக மீண்டும் அந்த அமைதியான வனத்தில் நுழையும் ஆசையில் தெருவை அடைகிறான். சூரிய ஒளியே படாத அந்தத் தெருவில் எங்கும் வெய்யில் மண்டையை பிளந்தது. தெரு மாற்றி வந்து விட்டோமோ என்று ஒரு ஐயம் இருந்தது. தெருவெங்கும் கொழுந்து இலைகளும், கிளைகளும் வெட்டப்பட்டு கிடந்தன. பறவைகளின் கீச்சுக்கள் ஒப்பாரி போல காதில் கேட்கிறது. வெட்டப்பட்ட ஒவ்வொறு மரத்தின் அருகிலும் பறவைகளின் கூடுகள் அழிக்கப்பட்டு கிடந்தன. காக்கைகளும், குருவிகளும், தங்களின் உறைவிடத்தை இழந்து அந்தத் தெருவில் தன் குஞ்சுகளை தேடி அலைந்து கொண்டிருந்தன. மனது ஒரு கணம் வலித்தது. இந்தப் பறவைகள் அந்தக் கூட்டினைக் கட்ட என்னப் பாடுபட்டிருக்கும் என்று கோபத்துடன் நடக்கும் போது ஒருவர் கைகளில் எதையோ கொண்டு குப்பைத் தொட்டியில் போடுகிறார். என்னவென்று பார்த்தால் இறந்து போன இளம் காக்கை குஞ்சுகள். கண்களில் கண்ணீர் வரத் துவங்கியது. கோபம் தலைக்கேறி அருகில் உள்ள பெரியவரிடம் விசாரிக்கச் சென்றான்.
                        பெரியவர் அவருடைய மங்கலான கண்ணாடியை தோளில் கிடக்கும் துண்டால் துடைத்து விட்டு அண்ணாந்து அவனை நோக்கி பார்த்து என்னப்பா தம்பி என்ன வேண்டும் என கேட்க …
     அவன் “அய்யா ஏன் இங்க மரங்களெல்லாம் வெட்டிப் போட்டுருக்காங்க”
                    “அதுவாப்பா, ரெண்டு நாளா கோவில் திருவிழால்ல. தெருவுல பந்தல் போட, அப்புறம் சப்பரம் போக எடஞசலா இருந்ததால இங்க இருக்கிற மரத்த எல்லாம் பாவிப் பயலுக வெட்டிப் போட்டானுங்கப்பா… நான் தெனமும் இந்த மரத்தடி நெழலுதான் காத்தாட உட்காந்து இருப்பேன் …. இனிமே எங்க போயி உட்கார”
இந்த மாசம் என்னய்யா திருவிழா?
                பெரியவர் கிண்டலாக சிரித்துக்கொண்டு “அதுவா, இந்த ஊர்ல மழையே பெய்ய மாட்டேனுங்குதாம். இந்த சாமி எனக்கு திருவிழா நடத்து நான் மழை தாரேனு சொல்லுச்சாம். அதான் மரத்தை எல்லாம் வெட்டிப் போட்டு மழைய கேட்கிறானுங்க மடப்பயலுக. தம்பி இவனுங்க மரத்த வெட்டி மழைய கேட்பானுங்க, சாமி கொடுத்துட்டுதானே மறு வேல பார்க்கும் பாருங்க. எப்பத்தான் திருந்தப் போகுறாங்களோ இந்த மெத்தப் படித்த மேதாவிங்க….
           
                      இந்த மாக்களை நினைத்து வறுத்தப்படுவதா இல்லை வேதனைப்படுவதா என்று மனதில் முனுமுனுத்துக்கொண்டே அவன் தன் அலுவலகம் நோக்கி நடக்கும் போதே பெரிய கட் அவுட் ஒன்று தென்பட்டது. “மழை வேண்டி விரதம்” என்று நான்கைந்து தலைகள் செல்போன் வைத்த மாதிரி போஸ் வேரு …. சகிக்க முடியாமல் அன்றிலிருந்து இந்த தெருப் பக்கம் வரக்கூடாது என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு நடக்கும் பொது அவனுக்கு தான் எழுதிய பூமாதேவியின் புலம்பல்களுடன் கூடிய சில வரிகள் நியாபகம் வந்தது.

எதிர் காலத்த புரிஞ்சி நடந்துக்க எம்மவனே,
தினம் பாரஞ் சுமக்க முடியலடா எம்மவனே,
நாட்டு நடப்பு புரியலடா எம்மவனே,
நாளும் பொழுதும் ஓடுதடா எம்மவனே,
கூறு போட்டு பிரிச்சிட்டியே எம்மவனே,
கூவி கூவி வித்துட்டியே எம்மவனே,
அடுக்கடுக்க கட்டுறியே எம்மவனே,
எத்தனைய தாங்குவேண்டா எம்மவனே,
காடு மரம் போயிடுச்சே எம்மவனே,
காத்து மழை ஓடிடுச்சே எம்மவனே,
நாக்கு வறண்டு துடிக்கிறேண்டா எம்மவனே,
ஒத்தையிலே புலம்புறேண்டா எம்மவனே,
வெக்கையில வேகுறேண்டா எம்மவனே,
வேதனையில் சுத்துறேண்டா எம்மவனே,
கோபத்துல எரியுறேண்டா எம்மவனே,
சோகத்துல மிதக்குறேண்டா எம்மவனே,
தூங்கக்கூட முடியலடா எம்மவனே,
இப்போ பாடையில போகுறேண்டா எம்மவனே…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக