திங்கள், 29 ஏப்ரல், 2013

துளித் துளியாய் - 1



புகைப்படங்கள்




உன்னோடு





உன்னோடு கழிந்திடும் நேரம் உண்டா?
கண்ணோடு கலந்திடும் யோகம் உண்டா?
என்னோடு நீயும் பேசிச் சென்றால்
தூங்காதே அந்த இரவுகள்

இன்றோடு விடிந்திடும் காலம் மெய்யா?
விண்ணோடு முடிந்திடும் வானம் பொய்யா?
என்னோடு நீயும் நேசம் கொண்டால்
நீங்காதே உந்தன் நினைவுகள்

உன்னோடு கழிந்திடும் நேரம் உண்டா?
                  
மனம் எங்கெங்கும் நீயே
வலம், இடம் எங்கெங்கும் நீயே தான்
            
இரவிலும், இன்பக் கனவிலும் வந்து 
உறைபவள் நீயே நீயே
வலையிலும், துள்ளும் அலையிலும்
இழுத்தவள் நீயே நீயே

சிரிப்பதும், பின்பு முறைப்பதும்          
விருப்பதும், பின்பு வெறுப்பதும்
நீயே நீயே
      
உன்னோடு கழிந்திடும் நேரம் உண்டா?     
கண்ணோடு கலந்திடும் யோகம் உண்டா?
என்னோடு நீயும் பேசிச் சென்றால்
தூங்காதே எந்தன் இரவுகள்

இன்றோடு விடிந்திடும் காலம் மெய்யா?
விண்ணோடு முடிந்திடும் வானம் பொய்யா?
என்னோடு நீயும் நேசம் கொண்டால்
நீங்காதே உந்தன் நினைவுகள்.............

வியாழன், 18 ஏப்ரல், 2013

காலத்தின் கவிதைகள்
















முன்னங்கால்களில் மண்டியிட்டு
இலைகள் பிடுங்கும்  குட்டி ஆடு

தன்னைத் தானே சுற்றிக் கொண்டு
அன்பைச் சொல்லிடும் மாடப் புறா

கோவில் தீபத்தை ஊதி அணைத்திட
முரண்டு பிடிக்கும் தென்றல்

சத்தமின்றி அடுப்படி நுழைந்து
பானைகள் உருட்டும் பூனை

பதுங்கி பதுங்கி பலகாரம்
ருசிக்கவரும் சுண்டெலி

ரகசியம் சொல்லக் காதைத்
தேடி வரும் குழவி

வெற்றிலை வாயில் கேள்விகள்
துப்பும் கிழவி

கண்ணாடியில் தன்னையே சண்டைக்கு
இழுக்கும் குரங்கு

முருங்க மரங்களில் பூக் கொறித்து
தாவும் அணில்கள்

சகதிக் குட்டையில் முங்கிக் குளிக்கும்
சிட்டுக் குருவி

வாசப்படியை கூட்டி தெளித்து
கோலமிடும் சிறுமி

நட்சத்திரங்களை எண்ணிவிட்டு
கணக்கு சொல்லும் சிறுவன்

வாடிப்போகியும் ஆளை 
மயக்கும் மல்லிகை

இரவில் தெருவெங்கும் 
மணக்கும் வேப்பம்பூ

ஜன்னல் நிலவை 
வம்புக்கு இழுக்கும் கவிஞன்

பொயாய் கடித்து
விளையாடும் குட்டி நாய்கள் 

எருமைக்கு காது குடையும்
காக்கை உறவுகள்

சத்திரத்தில் கதை அளக்கும்
சாமானிய பெருசுகள்

இழவு வீட்டில்
கும்மாளமிடும் சிறுசுகள்

நையென பெய்யும் அடைமழை
சட்டென மின்னும் கத்தரி மின்னல்

இப்படியாய் நீங்களும்
ரசித்திருப்பீர்கள்
கடந்து வந்த
காலத்தின் கவிதைகளை....

புதன், 20 மார்ச், 2013

சிமிட்டல்கள்





ஒரு பானை சோத்துக்கு
ஒரு சோறு பதம் என்பார்கள்
இன்றும் பழமொழி இருக்கிறது 
பானைதான் இல்லை

யார் சொன்னது அரசு அலுவலகங்களில்
வேலைகள் சரிவர நடப்பதில்லை என்று... "மின்சார வாரியம்"

ஆயிரம் கூட்டங்களிடையே அமைச்சர் மாட்டுமல்ல
நானும் தான் என் வேலைக்காக... "சென்னை ட்ராபிக்"

சொன்னவர் நினைப்பார்
இது இவரிடம் மட்டுமே இருக்குமென்று... "ரகசியம்"

அனைய மறுக்கிறது தீபம்..."காற்றின் தீரம்"

திருதத்திற்க்காய் தட்டப்படுகிறது தலை..."தும்மல்"

என் கல்லறைக்காக நீ கொடுக்கும்
இன்பச்  சில்லறைகளோ இவைகள்..."புன் சிரிப்பு

வியாழன், 14 மார்ச், 2013

மூக்குத்திப் பெண்ணே


கொத்திக் கொத்திப் போகின்றாய்
மூக்குத்திப் பெண்ணே - உன்
பிஞ்சுக் குரலில் எனை
திட்டிக் கொண்டே கரம்
பற்றிக் கொண்டே போகின்றாய்
 
 
விக்கிக் கொண்டே போகின்றேன்
மூக்குத்திப் பெண்ணே – என்
தொண்டைக் குழியில் உனை
வைத்துக் கொண்டே தினம்
திக்கிக் கொண்டே போகின்றேன்
 
 
பத்திக் கொண்டே போகின்றாய்
மூக்குத்திப் பெண்ணே - உன்
நெத்திப் பொட்டில் எனை
சுத்திக் கொண்டே அதை
தொட்டுக் கொண்டே போகின்றாய்
 
 
வத்திக் கொண்டே போகின்றேன்
மூக்குத்திப் பெண்ணே - உன்
எண்ணக் கடலில் தினம்
சிக்கிக் கொண்டே
தரை தட்டிக் கொண்டே போகின்றேன் 
 
 
தொத்திக் கொண்டே போகின்றாய்
மூக்குத்திப் பெண்ணே - உன்
அச்சுக் குழலில் எனை
தச்சுக் கொண்டே மனம்
பிச்சுக் கொண்டே போகின்றாய்
 
 
மக்கிக் கொண்டே போகின்றேன்
மூக்குத்திப் பெண்ணே – என்
மிச்ச உயிரில் உனை
மொய்த்துக் கொண்டே தினம்
பொய்த்துக் கொண்டே போகின்றேன்

புதன், 13 மார்ச், 2013

துட்டு வேணும் தம்பி...


உனக்காக நான் படும் பாட்டைத்தான்
இங்கே எல்லோரும் படுகிறார்கள்.
காலத்தைக் கூட வென்று விடலாம் போல
உன்னை வெல்ல முடியவில்லையே....
விதியைக் கூட மாற்றி விடலாம் போல
உன்னை மாற்ற முடியவில்லையே....
நல்ல உறவுகளைப் பிரிக்கிறாய்
நல்ல நினைவுகளை அழிக்கிறாய்
பத்தல்ல பத்தாயிரம் செய்கிறாய்
பாதாலமல்ல பரலோகமே பாய்கிறாய்
தவழ நீ தேவை
வளரவும் நீ தேவை
படிக்க நீ தேவை
பழகவும் நீ தேவை
மணக்க நீ தேவை
மதிக்கவும் நீ தேவை
பிறக்க நீ...
பிழைக்க நீ...
புதைக்கவும் நீ தேவைப்படுகிறாய்
உன்னை மிதிப்பவர்களை
நீ மதிக்கிறாய்
உன்னை மதிப்பவர்களை
நீ மிதிக்கிறாய்
நியாபகம் இருக்கட்டும்
வயிற்றில் பசி உள்ள வரை மட்டுமே
இம் மண்ணில் நீ
தெய்வமென பிழைத்து கிடப்பாய்

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

அதிகாலை விக்கல்

                                           


கனவுகள் மிகுந்த அதிகாலையில்
திடிரென திரளாய் விக்கல்கள்
உன்னால் நான் நினைக்கப்படுகின்றேன்
அதுவும் யாரும் விழித்திடாத
இந்த அதிகாலையில்!!!
நீ என்னை விடாது நினைக்கும் போது
தண்ணீர் குடிக்க மனமா வரும்
நொடிக்கொரு முறை நீ என்னை
நினைப்பதே கதியென கிடப்பது தகுமோ

நீயே நினைத்துகொண்டிருந்தால் பிறகு நான் என்று?

ஆகவே விக்கல் எனக்கு பிடிக்கும்
விடாத விக்கல் மிகப் பிடிக்கும்

என்னைப் பிடித்த விக்கல் உன்னையும் பிடிக்கட்டும்
 

புதன், 6 பிப்ரவரி, 2013

இளவேனிற்ச் சாரல்






















இளவேனில் மாலை
பறவைகள் கூடுகளில்
கீச்சல்கள் காதுகளில்
செங்கதிர் மறைந்து
செவ்வானம் அவிழ
செம்மண் தரையில்
செங்காந்தள் தவழ
ஆடிடும் மயிலே
ஓடிடும் வெயிலே
கலகல ஆலம்
சலசல வாழை
திருதிரு தென்னை
படபட மின்னல்
சடசட சாரல்
நடத்திடு வானே
நனைந்திட நானே
துவட்டிடும் கைகள்
சுடச்சுட தேநீர்
கொடுத்திடும் வேளை
துருதுரு மழையை
கலைத்தது கனவு

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

நீ எங்கும் உண்டோ?













இறந்தவரெல்லாம்
உன்னிடமெனில்
உன்னிடமிருந்து
யார் வந்து சொன்னது
நீ இருக்கிறாய் என்று
-
ஆழி நீ எனில்
பூமி நீ எனில்
காற்று நீ எனில்
நெருப்பு நீ எனில்
வானம் நீ எனில்
ஏற்றுக்கொள்கிறேன்
உன் சீற்றங்களை
-
ஆக்கும், அழிக்கும்
உரிமைகள் உனதெனில்
நீ ஆக்கிய உயிர்கள்
அழிக்கும் உரிமையை
பெற்றதேன்.
-
காப்பது நீயெனில்
காவலர்கள் ஏன் இங்கு
-
நீ இல்லை
என்று சீறும் நான்
உன்னை
நீ காட்டிக்கொள்ள
நேரம் தருகிறேன்
முடிந்தால்
முன் நில்லும்

உனக்கென










உனக்கென தினம் தினம்
உதிக்கிறேன் அந்தி வெண்ணிலவே
-
தினம்
இரவில் விழித்து; நிலவை குழைத்து
வரைகிறேன் உந்தன் ஓவியம்
கனவை சேர்த்து; கவிதை கோர்த்து
வடிக்கிறேன் இந்த காவியம்
-
நதியில் விழுந்து; மணலில் கரைந்து
காண வந்தேன் உன்னைத் தேடி வந்தேன்
மழையில் நனைந்து; கடலில் கலந்து
பாதம் கண்டேன் உன்னுள் வாதம் கொண்டேன்
தினம் இரவில் விழித்து…
-
-
மழையானவள்;
அலையானவள்
என்று என்னையிவள் சேர்ந்திழுப்பாளோ
-
கனவாகிறாள்;
விதையாகிறாள்
என்று…………எனக்கிவள் உறவும் ஆவாள்
-
கோதையே என் சீதையே
எனை தெரிந்துகொள் – கொஞ்சம்
புரிந்துகொள்
கவிதையே என் கவிதையே
எனை எடுத்து சொல் – மெல்ல
தொடுத்து செல்…
-
காற்றாகவே நுழைந்தவள்
ஆற்றாகவே நிறைகிறாள்
வேராகவே புதைந்தவள்
பூவுமாகி மணக்கிறாள்
-
தினம்
இரவில் விழித்து; நிலவை குழைத்து
வரைகிறேன் உந்தன் ஓவியம்
தினம்
கனவை சேர்த்து; கவிதை கோர்த்து
வடிக்கிறேன் இந்த காவியம்

வாழ்கையின் வாழ்க்கை












கெழக்கு அது விடிஞ்சும் என்
பொழப்பு ஏனின்னும் விடியல
நெலவு அது தொலஞ்சும் என்
கனவு ஏனின்னும் தொலையல
-
மேகம் அது கலஞ்சும் என்
சோகம் ஏனின்னும் கலையல
நேரம் அது கொறஞ்சும் என்
பாரம் ஏனின்னும் கொறயல
-
கடனா கெடக்குது ஒலகம்
விடுனா புடிக்குது கலகம்
பொறுப்பா துடிக்குது இதயம்
வெறுப்பா இருக்குது நெதமும்
-
என்னதான் இல்ல
கைமீறிப் போகுதே எல்ல
அன்புதான் தொல்ல
கண்மீறித் தேடுதே மெல்ல
-
உசுரக் கொடுத்து ஒழச்சா
வாழுவதெப்போ
வயிறு காயப் படுத்தா
தூங்குவதெப்போ
-
மனச மறச்சு ஒளிச்சா
சேருவதெப்போ
பழச நெனச்சு கெடந்தா
மீளுவதெப்போ
-
கெழக்கு அது விடிஞ்சும் என்
பொழப்பு ஏனின்னும் விடியல
நெலவு அது தொலஞ்சும் என்
கனவு ஏனின்னும் தொலையல