செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

நானும் நிலவும்


விடியாத அதிகாலை
அடர்ந்த பனியின் சாரத்தை
முட்டிக் கிழித்து முன்னே
சென்று கொண்டிருக்கிறது
பொதிகை புகை வண்டி
முன்பதிவில்லாத
இருக்கையின் ஓரம் அது.
உறக்கம் கண்களில் இல்லை
ஜன்னல் கதவினை
மெல்லத் திறக்கிறேன்.
வெள்ளைப் பனி என்னை
அள்ளிக் கொண்டது
ஆங்கங்கே விளக்குகள்
விழித்திருந்தாலும் அதன்
பார்வை என்னவோ
மங்கலாகத் தான் இருக்கின்றது.
இப்போது
ஒரு நதியின் மேம்பாலத்தைக்
கடக்கிறது பொதிகை.
ஈரக்காற்றில் என் இறந்த
காலங்கள் மிதக்கத் தொடங்கின.
பௌர்ணமிக்கு முந்தய நிலவு
இன்னும் பறிக்காமல்
விண்ணில் இருக்கின்றது
கண்களை விட்டு சிறிதும் விலகாமல்
நண்பனாய்  கூடவே
பயணப்படும் அதன்
பிரியத்தை என்னவென்று சொல்வது
உலகை வெறுக்கின்ற
ஒவ்வொரு நொடியும்
எனக்கென்று நீ இருக்கையில்
நானும் இருப்பேன்
உனக்காக …..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக